தத்தா ஜெயந்தி விழாவில் வன்முறை; சிறுவர்கள் உள்பட 32 பேர் கைது
கல்வீச்சில் 4 வாகனங்கள் சேதம்- 5 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல், தத்தா ஜெயந்தி விழாவில் வன்முறை; சிறுவர்கள் உள்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிக்கமகளூரு,
தத்தா ஜெயந்தி விழாவில் வன்முறையில் ஈடுபட்டதாக சிறுவர்கள் உள்பட 32 பேரை கைது செய்துள்ளோம் என்றும், கல்வீச்சில் 4 வாகனங்கள் சேதமடைந்து உள்ளதாகவும், 5 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை சிக்கமகளூரு டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தத்தா ஜெயந்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். இருப்பினும் நாங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மதியம் 1 மணி வரை அமைதியான முறையில் தத்தா ஜெயந்தி விழா நடந்தது. மதியம் 1.30 மணி அளவில் பாபாபுடன்கிரி அருகே தனியார் பஸ்சும், காரும் மோதிக்கொண்டன. இதில் யாரும் காயமடையவில்லை. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்று வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தோம்.
இதைதொடர்ந்து தத்தா குகைகோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களில் சிலர், தரிசனம் செய்ய காலதாமதம் ஆகுவதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மேற்கு மண்டல ஐ.ஜி., நான் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினோம். தத்தா குகை பகுதியில் மற்றொரு அமைப்பினரின் சமாதிகளும் உள்ளன. அவற்றை சிலர் சேதப்படுத்த திட்டம் தீட்டி இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனால் அந்தந்தப் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இருப்பினும் இதையும் மீறி தத்தா குகை கோவிலின் இடதுபக்கம் இருந்த முஸ்லிம் சமாதிகளை, கம்பி வேலிகளை ஏறி குதித்து சென்று சிலர் சேதப்படுத்தினர். உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிக்கமகளூரு டவுனில் இரு தரப்பினர் இடையே ஆங்காங்கே மோதல்கள் ஏற்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்கள் தத்தா குகை கோவிலில் இருந்து புறப்பட்டு சிக்கமகளூருவுக்கு வந்தோம்.
சிக்கமகளூரு– மல்லந்தூர் ரோட்டில் உள்ள உப்பள்ளி பகுதியில் பிரவீன் என்ற வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சமீர், ஜோகர், ஹலந்தர் ஆகியோர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிரவீன் சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான புகாரின் மீது பசவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சமீர், ஜோகர், ஹலந்தர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
அதேப் போல் சிக்கமகளூரு தாலுகா பாபாபுடன்கிரி அருகே அத்திகுந்தி பகுதியில் வாகித் என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்து மற்றொரு அமைப்பினர் தாக்கியுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இருதரப்பினர் மோதல் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் இந்து அமைப்பினர் ஏராளமான வாகனங்களில் சிக்கமகளூரு–பேளூர் ரோடு வழியாக நகரில் நுழைய முயன்றனர். அவர்களை நாங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தினோம். அதையும் மீறி வாகனங்களுடன் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் நாங்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தோம்.
சிக்கமகளூரு–பாபாபுடன்கிரி ரோட்டில் உள்ள ஆலேனஹள்ளி கிராமத்தில் இந்து அமைப்பினர், 2 வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்று வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டினோம். அதேப் போல் சிக்கமகளூரு டவுனிலும் அரசு பஸ், தனியார் பஸ் ஆகியவை கல்வீசி தாக்கப்பட்டன. இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. கல்வீச்சு சம்பவத்தில் மொத்தம் 4 வாகனங்கள் சேதமடைந்தன.
சிக்கமகளூரு தமிழ்காலனியில் இருபிரிவினர் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதை கேள்விபட்டதும் போலீசார் அங்கு விரைந்து சென்று அமைதியை நிலைநாட்ட முயன்றனர். ஆனால் அப்போது போலீசார் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் தொடுத்தனர். இதனால் அங்கு சகஜநிலை ஏற்பட வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தோம்.
அந்தப் பகுதியில் ஒரு அமைப்பை சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 15 பேர், 6 பெட்ரோல் குண்டுகளை தயாரித்து வைத்திருந்ததும், அவற்றை வெடிக்க செய்து வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்ததும் தெரியவந்தது. உடனே நாங்கள் விரைந்து சென்று 5 பெட்ரோல் குண்டுகளை மட்டும் பறிமுதல் செய்தோம். ஒரு பெட்ரோல் குண்டு உடைந்துபோய்விட்டது. மேலும் சிறுவர்கள் உள்பட 15 பேரை கைது செய்துள்ளோம்.
தத்தா ஜெயந்தி விழா வன்முறை தொடர்பாக இருதரப்பினரையும் சேர்ந்த 32 பேரை இதுவரை கைது செய்துள்ளோம். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து, வன்முறையை தூண்டியவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் பற்றி துப்புதுலக்கி வருகிறோம்.
தத்தா ஜெயந்தி விழாவை அமைதியாக நடத்த இரு அமைப்பினரை சேர்ந்தவர்களிடம் முன்கூட்டியே பத்திரம் எழுதி வாங்கி இருந்தோம். தற்போது தத்தா ஜெயந்தி விழாவில் வன்முறை ஏற்பட்டுள்ளதால், அந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தவர்கள் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.
மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவியதை தொடர்ந்து நேற்று (நேற்று முன்தினம்) மதியம் முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்று (நேற்று) சிக்கமகளூரு மாவட்டம் முழுவதும் அமைதி திரும்பியுள்ளது. இருப்பினும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேப் போல் தத்தா ஜெயந்தியை முன்னிட்டு சிக்கமகளூரு மாவட்டத்தில் 3 நாட்களாக அமலில் இருந்த 144 தடை உத்தரவு நேற்று (நேற்று முன்தினம்) இரவு 12 மணி முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் விலக்கி கொள்ளப்பட்டது
வன்முறையின் போது முஸ்லிம் சமாதிகள், அங்கிருந்த பெயர் பலகைகள் சேதப்படுத்தப்பட்டன. அவற்றை உடனே சரி செய்து கொடுத்துள்ளோம். பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி விரும்பதாக சம்பவம் நடந்துவிட்டது. இதனால் நாங்கள் வருத்தம் அடைந்துள்ளோம். குகை பகுதியில் உள்ள முஸ்லிம் சமாதிகள் உள்ள பகுதியில் கூடுதல் போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி இருந்தால் வன்முறைகள் ஏற்பட்டு இருக்காது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.