சூலூரில் இரட்டை கொலை: தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
சூலூரில் நடந்த இரட்டை கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க சென்னை, மதுரை, கோவை சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்,
மதுரை அருகே மானாமதுரையை சேர்ந்தவர் கருவாய் முருகன் (வயது 38). இவர் சூலூரில் கட்டிட கான்கிரீட்டுக்கு கம்பி கட்டும் பணியை ஒப்பந்தம் எடுத்திருந்தார். அவரிடம் மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த சிவசக்தி (33), ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டி (32), அலங்காநல்லூரை சேர்ந்த சீனிவாசன் (48) உள்பட பலர் வேலை செய்து வந்தனர்.
தொழிலாளர்களுக்கு சம்பளத்தை சரியாக வழங்காமல் கருவாய் முருகன் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அவரிடம் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டனர். மேலும் கம்பி கட்டும் வேலைக்காக பொருட்களை தங்களுடன் எடுத்து சென்றதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கும், கருவாய் முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த கருவாய் முருகன், தன்னுடைய தம்பி வெற்றி மணிகண்டன் மற்றும் 5 பேரை மதுரையில் இருந்து கோவை அழைத்து வந்து நேற்று முன்தினம் சூலூர் அருகே சிறுவாணி டேங்க் ரோடு பகுதியில் சிவசக்தி, சீனிவாசன், பாண்டி ஆகியோரை கத்தியால் குத்தினார். இதில் சீனிவாசன், சிவசக்தி ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பாண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த இரட்டை கொலையில் தொடர்புடைய கருவாய் முருகன் உள்பட 7 பேரை பிடிக்க கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தலைமையில் சூலூர் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் லெலின், அப்பாத்துரை, பிராங்கிளின் கொண்ட ஒரு தனிப்படையும், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்–இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் ஆகியோர் கொண்ட மற்றொரு தனிப்படையும், அன்னூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சப்–இன்ஸ்பெக்டர் சிவகுமார் கொண்ட தனிப்படையும் என 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தனிப்படை போலீசார் சென்னை, மதுரை, கோவை சுற்று வட்டார பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையில் தொடர்புடையவர்களை தேடி வருகிறார்கள்.