இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க நாராயணசாமி நடவடிக்கை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க முதல்–அமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுச்சேரி,
முதல்– அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
கடந்த வாரம் ஏற்பட்ட ஒகி புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தில் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் வெவ்வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். இதுபோல் நடுக்கடலில் தத்தளித்த காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகுகளுடன் அவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் சங்கங்களின் சார்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஏற்கனவே முதல்– அமைச்சர் நாராயணசாமி சென்று முகாமிட்டுள்ள நிலையில் மீனவர்களின் பிரச்சினை குறித்து அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் நாராயணசாமி நேரில் வலியுறுத்தினார். இந்த கோரிக்கை குறித்து கடிதம் ஒன்றையும் வழங்கினார்.
இதேபோன்று ஒகி புயலின் விளைவாக லட்சத்தீவின் அருகில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க உதவி செய்யும்படி லட்சத்தீவின் நிர்வாகி பாருக்கானிடம் முதல்–அமைச்சர் நாராயணசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று அந்த மீனவர்களை தேடி மீட்குமாறு கடலோர காவல்படைக்கு லட்சத்தீவின் நிர்வாகி உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி மீனவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.