அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது


அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2017 4:00 AM IST (Updated: 7 Dec 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தியும், இதற்கு ஏதுவாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றக்கோரியும் விழுப்புரத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.

இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி நேற்று காலை இந்து முன்னணியினர் விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, நகர தலைவர் தரணிதரன், மாவட்ட துணைத்தலைவர் ஆனந்தபாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் வளவன், சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

உடனே விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 20 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story