குசால்நகரை தனி தாலுகாவாக அறிவிக்ககோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
குசால்நகரை தனி தாலுகாவாக அறிவிக்ககோரி நேற்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
குடகு,
குசால்நகரை தனி தாலுகாவாக அறிவிக்ககோரி நேற்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டு இருந்தது.
கடையடைப்பு போராட்டம்குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் சோமவார்பேட்டை, குசால்நகர் ஆகிய 2 டவுன் பஞ்சாயத்துகளும், 45 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. சோமவார்பேட்டை தாலுகாவிற்கு அதிக வருவாய் ஈட்டி தரும் பஞ்சாயத்தாக குசால்நகர் இருந்து வருகிறது. இந்த நிலையில் குசால்நகரை சுற்றியுள்ள சுண்டிகொப்பா, ஒசகோட்டை, வால்நூரு, தேகத்தூரு, செட்டஹள்ளி, நெல்லிதுக்கேரி உள்பட 25 கிராம பஞ்சாயத்துகளை ஒன்றிணைத்து குசால்நகரை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் கடந்த 3 மாதங்களாக குசால்நகரை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் மாநில அரசு போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது. இந்த நிலையில் நேற்று குசால்நகரை உடனடியாக தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குசால்நகரில், வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்புமேலும் அப்பகுதியில் உள்ள மடிகேரி– மைசூரு சாலையில் அமர்ந்து வியாபாரிகளும், அப்பகுதி மக்களும் போராட்டம் நடத்தினர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து அறிந்த குசால்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிப்பை போலீசார் சீர்செய்தனர். மேலும் நேற்று குசால்நகரில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.