புதுமாப்பிள்ளையை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் வியாபாரி கைது


புதுமாப்பிள்ளையை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் வியாபாரி கைது
x
தினத்தந்தி 10 Dec 2017 4:17 AM IST (Updated: 10 Dec 2017 4:16 AM IST)
t-max-icont-min-icon

புதுமாப்பிள்ளையை கொலை செய்ய முயன்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை ராமலிங்கபுரம் வீதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் மகாலிங்கம் (வயது32). டிரைவர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணமானது.

இதற்கிடையே கடந்த 4–ந் தேதியன்று இரவு மகாலிங்கம் மரப்பாலத்தில் உள்ள அவருடைய நண்பரின் பழச்சாறு கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென முகத்தில் துணியை கட்டிக்கொண்டு 4 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்து மகாலிங்கத்தை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மகாலிங்கத்தை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை வெட்டியது யார்? எதற்காக வெட்டினார்கள்? என விசாரணை நடத்தினார்கள். மேலும் தப்பி ஓடிய 4 பேர் கொண்ட மர்ம கும்பலையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மகாலிங்கம் வீட்டின் எதிர்வீட்டுக்காரர் ஆன முட்டை வியாபாரி ஆறுமுகம் (44). இவருக்கும் மகாலிங்கத்திற்கும் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் மகாலிங்கத்தை கொலை செய்யுமாறு தனது உறவுக்காரான அருள் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் அருள் தனது நண்பர்களான ஜனா, சூசைநாதன் உள்பட 4 பேருடன் சேர்ந்து மகாலிங்கத்தை கொலை செய்ய பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்கி உள்ளனர். அப்போது வெட்டு காயங்களுடன் மகாலிங்கம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிக்கு சென்றுவிட்டதால் அவரை விட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து ஆறுமுகத்தை நேற்று அவருடைய வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருள் உள்பட அவருடைய நண்பர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story