போலீசார் தாக்கியதாக கூறி ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
திருவள்ளூர் அருகே போலீசார் தாக்கியதாக கூறி ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று தனது மோட்டார்சைக்கிளில் வேப்பம்பட்டு பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது பூந்தமல்லியில் இருந்து வந்த அரசு பஸ் பிரபாகரனின் மோட்டார்சைக்கிளை மோதுவதுபோல் வந்து நின்றதாக தெரிகிறது. இதனால், பிரபாகரன் பஸ் கண்டக்டரிடம் தட்டிக்கேட்டார். உடனடியாக பஸ் டிரைவர் அப்பகுதியில் இருந்த செவ்வாப்பேட்டை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து பிரபாரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தாக்கியதால் பிரபாகரன் மனவேதனை அடைந்துள்ளார். உடனடியாக அவர் தனது மோட்டார்சைக்கிளில் வேப்பம்பட்டு ரெயில் நிலையம் சென்று சென்னை நோக்கி வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், பிரபாகரனின் உறவினர்கள் நேற்று இரவு திருவள்ளூர்–ஆவடி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள், கலைந்து செல்ல மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு–முள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.