ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேட்டுப்பாளையம்-கல்லாறு இடையே சாலை விரிவாக்க பணி மும்முரம்


ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேட்டுப்பாளையம்-கல்லாறு இடையே சாலை விரிவாக்க பணி மும்முரம்
x
தினத்தந்தி 17 Dec 2017 10:45 PM GMT (Updated: 17 Dec 2017 7:05 PM GMT)

மேட்டுப்பாளையம்- கல்லாறு இடையே ரூ.20 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி ரோடு மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லைப்பகுதியில் இருந்து கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6-ல் இருந்து 7 மீட்டர் அகலம் வரை உள்ள சாலையை 10 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட் டது. அதன்பின்னர் தேசிய நெடுஞ்சாலை ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பில் திட்ட மதிப் பீடு தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கப்பட்டு ஊட்டி ரோட்டில் மேட்டுப்பாளையம்- கல்லாறு இடையே 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கின.

முன்னதாக சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப் பட்டன. பின்னர் அவை பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றப்பட்டன. தற்போது தடுப்பு சுவர்கள், சிறிய பாலங்கள், மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த 6 மாதங்களுக்குள் முடிவடையும் என்று தெரிகிறது.

இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். மேலும் வாகனங்கள் எளிதாக சென்று வர முடியும் என்று வாகன ஓட்டுனர்கள் கூறுகிறார்கள். 

Next Story