சேலம் அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.15.30 லட்சம் மோசடி கர்நாடக வாலிபர் கைது


சேலம் அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.15.30 லட்சம் மோசடி கர்நாடக வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2017 11:15 PM GMT (Updated: 2017-12-18T01:44:43+05:30)

ஆன்லைன் மூலம் சேலம் அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.15.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் கர்நாடக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் கன்னங்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவி சித்ரா பெயரில் ஆன்லைனில் பிட் காயின் (சர்வதேச கரன்சி) வாங்கி, அதன்மூலம் வருவாய் ஈட்டும் தொழிலை செய்து வந்தார். அந்த வகையில் ஆன்லைன் மூலமாக பிட் காயின் நிறுவனத்தில் முதற்கட்டமாக ரூ.13 லட்சத்தை சக்திவேல் முதலீடு செய்தார். மேலும், தனது வருமானத்தை பெருக்க வேண்டி மீண்டும் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

ஆக மொத்தம் ரூ.15 லட்சத்து 30 ஆயிரத்தை பிட் காயின் நிறுவனத்தில் அவர் முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த பணம் முழுவதும் ஆசிரியர் சக்திவேலின் மனைவி சித்ரா பெயரில் ஆன்லைன் கணக்கில் வரவாகவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சம்பந்தப்பட்ட பிட் காயின் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, நான் செலுத்திய ரூ.15 லட்சத்து 30 ஆயிரம் எனது மனைவி கணக்கில் வரவாகவில்லை என்றும், அதற்கு என்ன காரணம்? என்று விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு வாடிக்கையாளர் சேவையில் இருந்து பேசிய நபர், ‘நெட்ஒர்க்‘ பிரச்சினை இருக்கிறது. அது தீர்ந்தவுடன் உங்கள் பணம் கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவித்தார்.

மேலும், அவர் பிட் காயின் நிறுவனத்தில் வைத்துள்ள கணக்கு விவரங்களை தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி சக்திவேல் தனது கணக்கு விவரங்களை அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசிய நபரிடம் தெரிவித்தார். ஆனால் அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்ட அந்த நபர், சக்திவேலின் பணத்தை தன்னுடைய கணக்கில் வரவு வைத்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த ஆசிரியர் சக்திவேல், இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள வன்னிமண்டியா பகுதியை சேர்ந்த முகமதுஷபி (26) என்பவர் ஆன்லைன் மூலம் சக்திவேலிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், பிட் காயின் வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண்ணாக, தனது தொலைபேசி எண்ணை இணைத்து, சக்திவேலின் மனைவி சித்ரா கணக்கில் இருந்த ரூ.15 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பிட் காயினை மோசடி செய்து எடுத்துக்கொண்டது தெரியவந்தது. இதேபோல், வேறு யாரிடமாவது பிட் காயின் மோசடியில் முகமதுஷபி ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story