அரசு இடத்தை காலி செய்ய உத்தரவு: மாற்று இடம் வழங்கக்கோரி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு


அரசு இடத்தை காலி செய்ய உத்தரவு: மாற்று இடம் வழங்கக்கோரி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 18 Dec 2017 10:30 PM GMT (Updated: 18 Dec 2017 6:53 PM GMT)

40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அரசு இடத்தை காலி செய்ய உத்தரவிட்டுள்ளதால், மாற்று இடம் வழங்கக்கோரி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல் உள்பட 356 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ஆதிதிராவிடர் பிரிவில் 3–ம் இடம் பிடித்த மானாமதுரை மாணவி யுவஸ்ரீக்கு, புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன் சார்பில் வழங்கப்பட்ட ரூ.40 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. குணசேகரன், மதகுபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன், ஒக்கூர் மாதவன் ஆகியோர் தலைமையில் சொக்கலிங்கபுரம் கிராமமக்கள் சார்பில் மனு ஒன்று கொடுத்தனர். அதில், சொக்கலிங்கபுரம், உச்சபுளி, ஊத்துபட்டி, ஒக்கூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் அரசு இடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்கள் வசிக்கும் இடத்தை காலி செய்யக்கோரி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மிகவும் வறுமை நிலையில் உள்ள எங்களால் வேறு இடத்திற்கு மாற முடியாத நிலை உள்ளது. எனவே தற்போது குடியிருக்கும் வீட்டிற்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும். மேலும் பசுமை வீடு திட்டத்தில் நிதிஉதவி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குறைதீர்க்கும் கூட்டத்திற்கு காரைக்குடி தேரோடும் வீதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர் செங்கமலம்(வயது 63) என்பவர் வந்தார். அப்போது அவர் தன்னுடைய கணவர், மகள் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது உதவியாளர் இன்றி சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாகவும் கூறி மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தார். அப்போது அங்கு வந்த அமைச்சர் பாஸ்கரன் மூதாட்டி செங்கமலத்திற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து உதவி செய்தார்.


Next Story