கையை அறுத்து மனு கொடுக்க வந்த வாலிபர் கலெக்டர் முன்பு தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு


கையை அறுத்து மனு கொடுக்க வந்த வாலிபர் கலெக்டர் முன்பு தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Dec 2017 10:30 PM GMT (Updated: 18 Dec 2017 7:34 PM GMT)

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கையை அறுத்துக்கொண்டு வாலிபர் ஒருவர் மனு கொடுக்க வந்தார். மேலும், கலெக்டர் எஸ்.பிரபாகர் முன்பு அவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் மனு கொடுக்க வந்தார். அவர் கலெக்டர் பிரபாகரிடம் மனு கொடுக்க சென்றபோது அவருடைய இடது கையில் ரத்த காயங்கள் இருந்தன. மேலும், அவரிடம் கோரிக்கைகளை கலெக்டர் கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது கலெக்டர் முன்பு அந்த வாலிபர் சிறிய கத்தரிக்கோலை எடுத்து காட்டியபடி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பவானி தாசில்தார் கிருஷ்ணன் விரைந்து சென்று அவரிடம் இருந்த கத்தரிக்கோலை பிடுங்கினார். அதன்பின்னர் சூரம்பட்டி போலீசார், அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் கையை அறுத்துக்கொண்ட வாலிபர் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முனுசாமியின் மகன் ரஞ்சித்குமார் (வயது 28) என்பதும், அவர் தனது கையை கத்தரிக்கோலால் அறுத்துக்கொண்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததும் தெரிய வந்தது. அவருடைய தாய் மாணிக்கரசி பெயரில் உள்ள பட்டா நிலத்தை கிராமக்கணக்கு பதிவேட்டில் பதிவு செய்து, புலப்படம் நகல் வழங்கக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

ரஞ்சித்குமாரின் தாய் மாணிக்கரசியின் பட்டா நிலத்தை கிராமக்கணக்கு பதிவேட்டில் பதிந்து புலப்படம் நகல் வழங்கக்கோரி விண்ணப்பித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அப்போது கிராமக்கணக்கு பதிவேட்டில் அதிகாரிகள் பதிவு செய்த பின் மாலைக்குள் புலப்படம் வழங்கப்படும் என்று கலெக்டர் அவரிடம் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த ரஞ்சித்குமார் திடீரென கத்தரிக்கோலை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டினார். அதன்பின்னர் போலீசார் அவரை கூட்டரங்கில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வாலிபர் ஒருவர் கத்தரிக்கோலை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story