ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய 210 கிலோ கஞ்சா பறிமுதல் முதியவர் கைது


ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய 210 கிலோ கஞ்சா பறிமுதல் முதியவர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2017 3:15 AM IST (Updated: 19 Dec 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய 210 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து முதியவரை கைது செய்தனர். வியாபாரி தப்பி ஓடிவிட்டார்.

தேனி,

ஆந்திராவில் இருந்து தேனி வழியாக கேரளாவுக்கு ஒரு காரில் கஞ்சா கடத்தி செல்வதாக, தேனி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி–கம்பம் சாலையில், உப்பார்பட்டி விலக்கு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஆந்திர மாநில பதிவு எண்ணுடன் வந்த ஒரு கார் போலீசாரை பார்த்ததும் நின்றது. காரில் இருந்த 2 பேர் தப்பி ஓடினர். உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். இதில் முதியவர் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர், காரில் போலீசார் சோதனை செய்தனர்.

அந்த காருக்குள் 7 சாக்கு மூட்டைகள் இருந்தன. அதற்குள் கஞ்சா இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சாக்கு மூட்டைகளில் மொத்தம் 210 கிலோ கஞ்சா இருந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சாவையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே பிடிபட்ட முதியவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த காசி (வயது 61) என்பதும், தப்பி ஓடியவர் கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் கூடலி பகுதியை சேர்ந்த ராயிஸ் (35) என்பதும் தெரியவந்தது.

இதில் ராயிஸ் கஞ்சா வியாபாரி. ஆந்திராவில் இருந்து அவர் தனது காரில் கஞ்சாவை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். இதற்கு உடந்தையாக காசியும் இருந்திருக்கிறார். இந்த கஞ்சாவை கேரளாவுக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்து, அங்கிருந்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், காரில் பொருத்தப்பட்டு இருந்த ஆந்திர மாநில பதிவு எண்ணும் போலியானது என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேனி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்தனர். தப்பி ஓடிய ராயிசை வலைவீசி தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.21 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story