குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளது; நாராயணசாமி


குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளது; நாராயணசாமி
x
தினத்தந்தி 18 Dec 2017 11:30 PM GMT (Updated: 18 Dec 2017 8:45 PM GMT)

குஜராத் சட்டமன்ற தேர்தலில் கடந்த முறையைவிட கூடுதல் இடங்கள் கிடைத்திருப்பதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றிபெற்றுள்ளது. குஜராத், இமாசல பிரதேச தேர்தல் முடிவுகளை இந்த நாடே எதிர்பார்த்தது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா 49 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 45 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி 32 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். 35 மத்திய மந்திரிகளும், 172 எம்.பி.க்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இதுதவிர உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல் மந்திரிகளும் பிரசாரம் மேற்கொண்டனர். இவர்களுக்கு மத்தியில் ராகுல்காந்தி தனி மனிதனாக அங்கு பிரசாரம் மேற்கொண்டார்.

காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் பெற்றதைவிட தற்போது கூடுதல் இடங்களை பெற்றுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பணபலம், அதிகார பலம் ஆகியவற்றை எதிர்த்து 45 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் பாரதீய ஜனதாவுக்கு எதிர்ப்பு உள்ளதையே இது காட்டுகிறது. ராகுல்காந்தி தலைவரான பின் அவருக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. அவர் பதவியேற்பு கூட்டத்தில் பேசும்போது, அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

விரைவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், கர்நாடக மாநிலங்களில் தேர்தல் வர உள்ளது. அப்போது கண்டிப்பாக மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். 2019 பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும்.

பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் தனிமனித சுதந்திரம் தகர்க்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. மத்திய ஆட்சியாளர்கள் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மூலம் பிற கட்சிக்காரர்களை பழிவாங்குகிறார்கள்.

புதுவை கவர்னரின் நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை மந்திரியிடம் புகார் தெரிவித்துள்ளேன். பிரதமரையும் சந்தித்து பேச உள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

விமானத்தில் உயர் வகுப்பு பிரிவில் பயணத்துக்கு தடை என்று கவர்னர் கூறியுள்ளாரே என்று முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, அப்படியானால் எங்களை நடந்து போக சொல்கிறாரா? முதலில் அவர் நடந்து போகட்டும் என்று கூறினார்.


Next Story