வீடு புகுந்து நகை, பட்டுப்புடவைகளை திருடிய இளம்பெண் கைது


வீடு புகுந்து நகை, பட்டுப்புடவைகளை திருடிய இளம்பெண் கைது
x
தினத்தந்தி 19 Dec 2017 4:15 AM IST (Updated: 19 Dec 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பட்டுப்புடவைகளை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை சந்திப்பு பாலபாக்யா நகர் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 52). இவர் நேற்று முன்தினம் பிற்பகலில் வீட்டின் முன்பக்க கதவை சாத்தி வைத்துவிட்டு, வீட்டின் பின்பக்கத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு இளம்பெண் நைசாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். அங்கிருந்த பீரோவை திறந்து தங்க நகைகள் மற்றும் பட்டுப்புடவைகளை திருடி பட்டுப்புடவைகளை மூட்டையாக கட்டினார்.

இந்த நிலையில் முத்துக்குமாரின் வீட்டுக்குள் இளம்பெண் நுழைந்ததை எதிர்வீட்டை சேர்ந்தவர் பார்த்து உள்ளார். அது தொடர்பாக விசாரிப்பதற்காக முத்துக்குமார் வீட்டின் வெளியே நின்று குரல் கொடுத்தார். இதைக்கேட்டு முத்துக்குமார் வீட்டின் பின்பக்கத்தில் இருந்து வீட்டின் உள்ளே சென்று முன்பக்க வாசல் நோக்கி நடந்தார்.

இதனால் செய்வதறியாமல் தவித்த இளம்பெண் மூட்டையுடன் வெளியே தப்பித்து ஓட முயன்றார். இதைக்கண்ட முத்துக்குமார் எதிர்வீட்டை சேர்ந்தவருடன் சேர்ந்து, அந்த இளம்பெண்ணை மடக்கிப் பிடித்தனர். பின்னர் இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிடிபட்ட இளம்பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளத்தை சேர்ந்த ரத்தினமணி மகள் அனிதா (20) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிதாவை கைது செய்தனர். மேலும் அவர் வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளாரா? அவருடன் கூட்டாளிகள் யாரேனும் வந்திருந்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story