ரெயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைப்பு தூத்துக்குடி விளாத்திகுளம்–மதுரை இடையே அமைக்கப்படுகிறது
தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு புதிய ரெயில்பாதை அமைக்கும் திட்டத்துக்காக முதல்கட்டமாக கையகப்படுத்தப்பட்ட 24 ஏக்கர் நிலம் ரெயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி–மதுரை இடையே புதிய ரெயில்பாதை அமைக்க அரசு முடிவு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த ரெயில்பாதை தூத்துக்குடி மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், பந்தல்குடி, அருப்புகோட்டை, கல்குறிச்சி, காரியாபட்டி, ஆவியூர், பாறைப்பட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு செல்கிறது. இந்த ரெயில் பாதையின் மொத்த தூரம் 143½ கிலோ மீட்டர் ஆகும்.
இந்த புதிய ரெயில் வழித்தடம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் கட்டமாக தூத்துக்குடி மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரை 18.7 கிலோ மீட்டர் தூரமும், 2–வது கட்டமாக மேலமருதூர் முதல் அருப்புக்கோட்டை வரை 51.3 கிலோ மீட்டர் தூரமும், 3–வது கட்டமாக அருப்புக்கோட்டை முதல் மதுரை வரை 73.5 கிலோ மீட்டர் தூரமும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது மேலமருதூர் வரை ரெயில்வே தண்டவாளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தது. அதன்படி வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், சாமிநத்தம், சில்லாநத்தம், வாலசமுத்திரம், மேலமருதூர் ஆகிய 6 கிராமங்களில் தனியார் நிலம் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தனியார் நிலம் 71.09 எக்டரும், அரசு நிலம் 3.778 எக்டர் நிலமும் கையகப்படுத்தப்படுகிறது. இதில் வடக்கு சிலுக்கன்பட்டி, சாமிநத்தம், சில்லாநத்தம் ஆகிய 3 கிராமங்களில் 24 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக முடிவடைந்து உள்ளது.
இந்த நிலத்தை ஒப்படைப்பதற்கான சான்றிதழை கலெக்டர் வெங்கடேஷ், தென்னக ரெயில்வே கோட்ட செயற்பொறியாளர் சந்துரு பிரகாசிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர்(பயிற்சி) சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) சிந்து, நிலஎடுப்பு தனிதாசில்தார் லெனின், ரெயில்வே உதவி என்ஜினீயர்கள் ராஜேந்திர முத்துக்குமார், பேச்சிராஜ், உதவி கோட்டபொறியாளர் தனராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கலெக்டர் கூறும் போது, ‘ரெயில்பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தது. தற்போது 3 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலம் ரெயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 3 கிராமங்களிலும் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான நில ஒப்படைப்பு சான்று விரைவில் வழங்கப்படும்’ என்று கூறினார்.