லஞ்சம் வாங்கியதாக மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், மேலாளர் கைது
ரூ.1¼ லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், மேலாளர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சீனிவாசன். மதுராந்தகம்– திருக்கழுக்குன்றம் சாலையில் அரையப்பாக்கம் என்ற இடத்தில் இவர் 13 ஏக்கர் நிலத்தை வாங்கி மனைகளாக பிரித்துள்ளார்.
இந்த நிலையில் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனக்கு சொந்தமான வீட்டுமனையை பதிவு செய்ய சீனிவாசன் சென்றார்.
அப்போது அவரிடம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) செல்வின் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு ரூ.1¼ லட்சம் லஞ்சம் தருவதாக சீனிவாசன் ஒத்துக்கொண்டார்.
லஞ்சம் கொடுக்க மனமில்லாத சீனிவாசன் இது குறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் மற்றும் போலீசார் ரசாயனம் தடவிய ரூ.1¼ லட்சத்தை சீனிவாசனிடம் கொடுத்து செல்வினிடம் கொடுக்கும்படி கூறினார்கள்.
இதையடுத்து சீனிவாசன் லஞ்சப்பணத்தை மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வின், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய மேலாளர் மோகன் ஆகியோரிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மோகன் மற்றும் செல்வினை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.