கோவையில் ஏ.டி.எம்.களில் கைவரிசை காட்டியவர்களுக்கு சேலம் ரெயிலில் நடந்த ரூ.5½ கோடி கொள்ளையில் தொடர்பா? தனிப்படை போலீசார் விசாரணை
கோவையில் ஏ.டி.எம்.களில் கைவரிசை காட்டியவர்களுக்கு சேலம் ரெயிலில் நடந்த ரூ.5½ கோடி கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற வடமாநிலத்தை சேர்ந்த மோஷம்கான், அமீன், சுல்பிஹீர், அமீத்குமார், சுபேர், முபாரக், முஸ்தாக், மற்றொரு சுபேர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காக கர்நாடக போலீசார் நேற்று முன்தினம் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் 8 பேரிடம் விசாரணை நடத்திவிட்டு கர்நாடகா திரும்பினார்கள். கேரளாவிலும் பல இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கோவையை சேர்ந்த தனிப்படை போலீசார் ஏ.டி.எம். கொள்ளையர்களிடம் 5–வது நாளாக விசாரணை நடத்தினார்கள். அதில் சத்தம் இல்லாமல் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்தது, கொள்ளையடிக்க பயன்படுத்திய தொழில்நுட்பங்களை அறிந்தது எப்படி? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது, கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு கொள்ளையர்கள் பதில் அளிக்கவில்லை. சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்ததாக தெரிகிறது. இவர்களுக்கு பல மாநிலங்களில் நடந்த கொள்ளையில் தொடர்பு இருப்பதால், சம்பந்தப்பட்ட மாநில போலீசாரும் கோவை வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தனிப்படையை சேர்ந்த போலீசார் கூறியதாவது:–
இந்த கும்பல் தென்மாநிலங்களை குறிவைத்துதான் கொள்ளையடித்து உள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களில்தான் அதிகளவில் கொள்ளையடித்து உள்ளனர். இதில் கேரளாவில் 5 ஏ.டி.எம்.களில் ரூ.75 லட்சமும், மராட்டியத்தில் உள்ள 11 ஏ.டி.எம்.களில் ரூ.1½ கோடியும், ஆந்திராவில் உள்ள ஏ.டி.எம்.களில் ரூ.85 லட்சம், கோவா மாநிலத்தில் ரூ.2 கோடி உள்பட இவர்கள் கொள்ளையடித்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க குறைந்தது ஒரு மணிநேரமாவது ஆகும். ஆனால் இந்த கொள்ளை கும்பல் 15 நிமிடத்தில் உடைத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு வெளியே சென்று விடுகிறது. அந்த அளவுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளையடித்து உள்ளனர்.
இவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்ததை பார்க்கும்போது, சேலம் ரெயிலில் நடந்த ரூ.5½ கோடி கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த ரெயிலின் மேற்கூரையை கியாஸ் வெல்டிங் மூலம்தான் துளை போட்டு உள்ளே சென்று பணம் கொள்ளையடித்தனர். அதுவும், ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்ததும் ஒரே மாதிரியாக இருக்கிறது. எனவே இந்த கும்பலை சேர்ந்தவர்கள்தான் சேலம் ரெயிலிலும் கொள்ளையடித்தார்களா? என்பதற்காக அந்த ரெயிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை இவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறோம்.
மேலும் இந்த கொள்ளையர்களிடம் விசாரணை நடத்துவதற்காக கேரள போலீசார் இன்று (புதன்கிழமை) கோவை வருகிறார்கள். பின்னர் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள். இதுபோன்று ஆந்திரா, மராட்டியம், கோவா மாநிலங்களை சேர்ந்த போலீசாரும் விசாரணை நடத்துவதற்காக விரைவில் கோவை வர உள்ளனர். பின்னர் அவர்கள் வடமாநில கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.