விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மனமகிழ் மன்றத்தில் உள்ள 8 கடைகளுக்கு சீல்
உடுமலை மன மகிழ் மன்றத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 8 கடைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு படி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
உடுமலை,
உடுமலை வ.உ.சி. வீதி, கல்பனா ரோடு சந்திப்பில் மனமகிழ் மன்றம் உள்ளது. இந்த இடம் நகராட்சி பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பிரமுகர்களை உறுப்பினர்களான கொண்ட மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அந்த மன மகிழ் மன்ற வளாகத்தில் 3 தங்கும் அறைகள், உணவு அறை, பிரதானஹால், ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
விளையாட்டு மைதானம் மற்றும் கார்கள் நிறுத்தும் இடமும் உள்ளது. மன மகிழ் மன்றத்தின் வடபுறம் கச்சேரி வீதியில் கடைகளும் கட்டப்பட்டுள்ளன. அதில் கடைகள், தனியார் அலுவலகம், ஆகியவை உள்ளன. அவை மன மகிழ் மன்றத்தால் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
மனமகிழ் மன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அறைகட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மனமகிழ் மன்றத்திற்கு நோட்டீசு அனுப்பி இருந்தது. நகராட்சிக்கும், மன மகிழ் மன்றத்திற்குமான பிரச்சினை சில காலமாக இருந்துவருகிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நகராட்சி அதிகாரிகள் மன மகிழ் மன்றத்திற்கு சென்று அங்கு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் 3 தங்கும் அறைக்கு சீல் வைத்தனர். இதன் தொடர் நடவடிக்கையாக அங்கு மீண்டும் சென்ற அதிகாரிகள் பிரதான ஹாலுக்கு சீல் வைத்தனர். அத்துடன் கடைகள் கட்டப்பட்டுள்ள பகுதியில் மேல் தளத்தில் வாடகைக்கு விடப்பட்டு இருந்த 3 அறைகளுக்கும் சீல் வைத்தனர்.
இதற்கிடையில் உடுமலை நகராட்சிக்கும், மனமகிழ் மன்றத்திற்கும் இடையிலான பிரச்சினை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு படி மன மகிழ்மன்றத்தின் பிரதான நுழைவு வாயில் மற்றும் பின்புறம் உள்ள கதவுகள் ஆகியவற்றுக்கு கடந்த 7–ந்தேதி சீல் வைக்கப்பட்டது.
உடுமலை மன மகிழ் மன்றத்தின் வடபுறம் கச்சேரி வீதியில் 4 அறைகள் கொண்ட கட்டிடத்திற்கு மட்டும் அனுமதி பெற்று கட்டப்பட்டு இருந்தது. இதே கட்டிடத்தில் மேலும் 8 கடைகள் விதிமுறைகளுக்கு மாறாக 8 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக நகராட்சி தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கடைகளுக்கும் சீல் வைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி உடுமலை நகராட்சி நகரமைப்பு அலுவலர் (பொறுப்பு) வெங்கடேஷ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், செல்வம், வருவாய் ஆய்வாளர்கள் நேற்று அந்த அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.
அப்போது மண்டல துணை தாசில்தார் பொன்ராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.