மந்தாரக்குப்பத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி ஒப்பந்த தொழிலாளி போராட்டம்
என்.எல்.சி.யில் மாதம் முழுவதும் வேலை வழங்க கோரி மந்தாரக்குப்பத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி ஒப்பந்த தொழிலாளி போராட்டத்தில் ஈடுபட்டார்.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு வீட்டு நிலம், விவசாய நிலம் கொடுத்தவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு முதல் கட்டமாக மாதம் முழுவதும் வேலை வழங்கப்பட்டது. ஆண்டுகள் செல்லசெல்ல வேலை வழங்கும் நாட்களை என்.எல்.சி. நிர்வாகம் குறைத்துக்கொண்டே வருகிறது. தற்போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், மாதம் முழுவதும் வேலை வழங்க கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்.எல்.சி. அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடமும் மனு கொடுத்துள்ளார். ஆனால் அவர்களுக்கு வேலை வழங்கும் நாட்களை அதிகரிக்கவில்லை.
மந்தாரக்குப்பம் அருகே உள்ள கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 52). இவர் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2–வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை முதல் கட்ட பணிக்கு சென்றார். பணி முடிந்ததும் வெளியே வந்த அவர், அந்த பகுதியில் இருந்த 60 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி, அதன் உச்சிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், என்.எல்.சி.யில் மாதம் முழுவதும் வேலை வழங்கினால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மந்தாரக்குப்பம் போலீசார் விரைந்து வந்து, ராஜேந்திரனிடம் நைசாக பேசி கீழே அழைத்து வந்தனர். பின்னர் அவரை, என்.எல்.சி. மனிதவளத்துறை பொது மேலாளர் நாராயணனிடம் அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொது மேலாளர் நாராயணன், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.