சபரிமலை அருகே பதுக்கிய 300 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை
சபரிமலை அருகே பதுக்கி வைத்திருந்த 300 கிலோ வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சபரிமலை,
சபரிமலை அருகே பாண்டித்தாவளம் பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கேரள மாநிலம் பத்தினம் திட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பினோய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சபரிமலை சன்னிதானம் போலீசார் மாறுவேடத்தில் சென்று பாண்டித்தாவளம் பகுதியில் வெடி வழிபாடு நடத்தப்படும் இடத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பூமிக்கு அடியில் பல கேன்களில் மறைத்து வைத்திருந்த 300 கிலோ வெடிப்பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து சன்னிதானம் சிறப்பு அதிகாரி சஞ்சை குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களின் வீரியம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வெடிபொருட்களில் சிலவற்றை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. வெடி வழிபாடு நடத்த 15 கிலோ வெடிபொருட்கள் கைவசம் வைக்க அனுமதி உள்ள நிலையில், 300 கிலோ வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்தது குறித்து வெடி வழிபாடு நடத்த ஒப்பந்தம் செய்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.