செங்கோட்டையில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
செங்கோட்டையில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செங்கோட்டை,
செங்கோட்டையில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வாக்குவாதம்தமிழக– கேரள எல்லை பகுதியான புளியரையில் மோட்டார் வாகன தணிக்கை சாவடி, போலீஸ் சோதனை சாவடி, வனத்துறை சோதனை சாவடி ஆகியவைகள் இயங்கி வருகிறது. இதில் போலீஸ் சோதனை சாவடி மட்டும் தனியார் இடத்தில் இருந்து வருகிறது. போதிய அடிப்படை வசதிகள் மற்றும் இடவசதிகள் இல்லாமல் போலீசார் சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பான போலீசாரின் கோரிக்கையின் பேரில், புளியரை பறவன்பத்துகளம் அருகில் அரசு நிலத்தில் போலீஸ் சோதனை சாவடிக்கு புதிய நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு அரசு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனாலும் புதிய கட்டிடம் கட்டப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், புளியரை சப்–இன்ஸ்பெக்டர்கள் முரளி, வேல்முருகன் மற்றும் போலீசார் அந்த இடத்தில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் துப்புரவு பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். இந்த இடத்தில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கக்கூடாது என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீஸ் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தாலுகா அலுவலகத்தை முற்றுகைஇந்தநிலையில் நேற்று செங்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரண்டு வந்தனர். பறவன்பத்துகளம் பகுதியில் போலீஸ் சோதனை சாவடி கட்டிடம் கட்டக்கூடாது. அதற்கு அனுமதி கொடுக்க கூடாது. மீறி கட்டிடம் கட்டினால் நாங்கள் எங்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம் என்று கூறி தரையில் அமர்ந்தபடி அனைவரும் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் தாசில்தார் செல்வகுமார், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சோதனை சாவடி கட்டிடத்தால் உங்களுக்கு என்ன பாதிப்பு என்று அதிகாரிகள் கேட்டனர்.
அதற்கு பொதுமக்கள், இந்த சோதனை சாவடியை கடந்து தான் எங்கள் பகுதிக்கு உணவு பொருட்களை நாங்கள் கடையில் இருந்து வாங்கி வரும் போது சோதனை என்ற பெயரில் எங்களுக்கு போலீசார் தொந்தரவு கொடுப்பார்கள் என்று கூறினர்.
சமரசம்அதற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், அப்படி தொந்தரவு எதுவும் இருக்காது. உங்களுக்கு போலீசார் பாதுகாப்பாக இருப்பார்கள். அப்படி தொந்தரவு கொடுத்தால் நீங்கள் என்னிடம் கூறுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன் என்று பொதுமக்களிடம் பேசினார். ஆனால் பொதுமக்கள் சம்மதிக்கவில்லை.
பின்னர் தாசில்தார் செல்வகுமார், உங்கள் கோரிக்கை மனுவை கொடுங்கள். நான் மாவட்ட கலெக்டரிடம் கூறி உங்களுக்கு பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். பல மணி நேரம் முற்றுகை போராட்டத்துக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் தாலுகா அலுவலக வளாக பகுதி பரபரப்பாக காணப்பட்டது.