விஜயாப்புராவில் பயங்கரம் பள்ளி மாணவி கற்பழித்து கொலை உடலுடன் உறவினர்கள் விடிய, விடிய போராட்டம்
விஜயாப்புராவில், பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டாள். இதனை கண்டித்து மாணவியின் உடலுடன் உறவினர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினார்கள்.
விஜயாப்புரா,
விஜயாப்புராவில், பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டாள். இதனை கண்டித்து மாணவியின் உடலுடன் உறவினர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் முதல்–மந்திரி சித்தராமையா மாணவியின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மாணவி கற்பழித்து கொலைவிஜயாப்புரா புறநகர் ஆதர்ஷ்நகரை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 16 வயதில் மகள் இருந்தாள். அவள் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வந்தாள். நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கு சென்று மாணவி வீட்டிற்கு நடந்து சென்றாள். அப்போது அங்கு வந்த 6 வாலிபர்கள் மாணவியை கடத்தி சென்றதாக தெரிகிறது. பின்னர் மாணவியை ஒரு வீட்டில் வைத்து வாலிபர்கள் கற்பழித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் உடலை வீசிவிட்டு வாலிபர்கள் சென்று விட்டார்கள்.
இதுபற்றி அறிந்ததும் ஆதர்ஷ்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது மாணவியை 6 வாலிபர்கள் கடத்தி சென்றதை, ஒரு சிறுமி பார்த்தது தெரிந்தது. அந்த வாலிபர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. மாணவியின் கழுத்தை நெரித்து வாலிபர்கள் கொலை செய்திருந்தார்கள். விசாரணைக்கு பின்பு அவளது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலுடன் போராட்டம்இந்த நிலையில், மாணவியை கற்பழித்து கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் மாணவியின் உடலை அம்பேத்கர் சிலையின் முன்பாக வைத்து அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த போராட்டம் நேற்று காலை வரை விடிய, விடிய நீடித்தது. இதுபற்றி அறிந்ததும் மாவட்ட பொறுப்பு மந்திரியான எம்.பி.பட்டீல் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானமாக பேசினார்.
அப்போது கொலையாளிகளை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதே நேரத்தில் மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் தான் வழங்குவதாகவும், அரசிடம் இருந்தும் நிதி உதவி பெற்று தருவதாகவும் மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார். அதைத்தொடர்ந்து, போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பின்னர் அங்கிருந்து மாணவியின் உடலை எடுத்து சென்றார்கள்.
சித்தராமையாவின் கார் முற்றுகைஇதற்கிடையே, முதல்–மந்திரி சித்தராமையா நேற்று மாலையில் விஜயாப்புரா டவுனுக்கு சென்றார். அப்போது மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் சித்தராமையாவின் காரை திடீரென்று முற்றுகையிட்டார்கள். மேலும் மாணவியை கற்பழித்து கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யும்படி கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. உடனே மாணவர் அமைப்பினரை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டு தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி இருந்தார்கள். இதையடுத்து, முதல்–மந்திரியின் காரை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பின்னர் அங்கிருந்து முதல்–மந்திரி சித்தராமையா புறப்பட்டு சென்றார்
.இதுகுறித்து ஆதர்ஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தலைமறைவாக உள்ள வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் விஜயாப்புராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்தராமையா நேரில் ஆறுதல்இதற்கிடையே, முதல்–மந்திரி சித்தராமையா நேற்று மாலை, கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு அவர் மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் 25 ஆயிரத்துக்கான காசோலையையும் சித்தராமையா வழங்கினார்.
இதையடுத்து அவர், பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.