நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: கடைகளை அடைத்து வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் அடிக்கடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சந்திப்பு பஸ்நிலையத்துக்கு வந்தனர். அங்கு கடைகள் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடைகள், பழக்கடைகள் மற்றும் அனைத்து கடைகளிலும் வெளியே வைக்கப்பட்டிருந்த மேஜை மற்றும் விளம்பர தட்டிகள், சாமான்களை பறிமுதல் செய்து அகற்றினர்.
மாநகராட்சி அதிகாரிகளின் தொடர் நடவடிக்கைக்கு பஸ்நிலைய கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அங்குள்ள சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் கடைகளை அடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையத்தின் ஒரு பகுதிக்குள் பஸ்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
போலீசாருடன் வாக்குவாதம்இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் பஸ்நிலையத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளை கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் சாலை மறியலை கைவிட்ட வியாபாரிகள், மதுரை ரோட்டில் அம்பேத்கர் சிலை பகுதிக்கு சென்றனர். அப்போது அந்த வழியாக ஆக்கிரமிப்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட மாநகராட்சி லாரியை மறித்து கோஷமிட்டனர். மேலும் அங்கும் தரையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
3 பேர் கைதுமேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றும் கடைகளை அடைக்குமாறு கூறியதாக அ.தி.மு.க.வை சேர்ந்த துவரை பேச்சிமுத்து உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறோம். இங்கு கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி எங்களது பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுகின்றனர். இதனால் எங்களது வியாபாரம் பாதிக்கப்படுகிறது’’ என்றனர்.
நெடுஞ்சாலைத்துறைஇதேபோல் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ச்சியாக நேற்று பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சிக்னலில் இருந்து வி.எம்.சத்திரம் வரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகள் முன்பு போடப்பட்டிருந்த செட்டுகள் மற்றும் கட்டப்பட்டிருந்த சுவர்கள், படிக்கட்டுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். விளம்பர பலகைகள், இரும்பு தூண்களும் அகற்றப்பட்டு மாநகராட்சி லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.