பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.62 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல் தம்பதி உள்பட 5 பேர் கைது


பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.62 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல் தம்பதி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2017 9:00 PM GMT (Updated: 22 Dec 2017 8:06 PM GMT)

பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.62 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தம்பதி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

பெங்களூரு,

பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.62 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தம்பதி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

தம்பதி கைது

துபாயில் இருந்து கோவா வழியாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் தங்கக்கட்டிகள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் மற்றும் விமான நிலைய போலீசார் சோதனை செய்தார்கள். அப்போது விமானத்தில் வந்த வயதான தம்பதி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை பிடித்து சோதனை செய்தார்கள். அப்போது அந்த தம்பதியிடம் தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில், டெல்லியை சேர்ந்த ஜூகல் கிரீஷ்(வயது 63), அவரது மனைவி ராதாராணி(62) என்று தெரிந்தது. துபாயில் இருந்து ராதாராணி தங்கக்கட்டிகளை விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார். கோவாவுக்கு விமானம் வந்ததும் அந்த கட்டிகளை ஜூகல் கிரீஷ் வாங்கி வைத்து கொண்டதும் தெரியவந்தது. அந்த தம்பதியிடம் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள 8 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.62 லட்சம் தங்கக்கட்டிகள்

இதுபோல, மலேசியாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததாக 3 பேரை விமான நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்களது பெயர் நவுசாத் ஷெரீப்(34), உன்னி செலபுரத்(26), ‌ஷம்சீர்(29) என்று தெரிந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

இந்த 2 சம்பவத்திலும் தம்பதி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டதுடன், ரூ.62 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் தொடர்பாக கைதான தம்பதி உள்பட 5 பேர் மீதும் விமான நிலைய போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story