தானேயில் மான், சிறுத்தைப்புலி தோல்கள் பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது


தானேயில் மான், சிறுத்தைப்புலி தோல்கள் பறிமுதல் பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2017 10:00 PM GMT (Updated: 22 Dec 2017 9:37 PM GMT)

தானேயில் சிறுத்தைப்புலி மற்றும் மான் தோல்களை விற்பனை செய்ய ஒரு கும்பல் வர உள்ளதாக காசர்வட்வல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தானே,

தானேயில் சிறுத்தைப்புலி மற்றும் மான் தோல்களை விற்பனை செய்ய ஒரு கும்பல் வர உள்ளதாக காசர்வட்வல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் தானேயில் உள்ள ஒரு வணிகவளாகம் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் அங்கு காரில் வந்து இறங்கிய பெண் உள்பட 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் போலீசார் அவர்கள் வைத்திருந்த கைப்பையை வாங்கி திறந்து பார்த்தனர்.

அதில், மான் மற்றும் சிறுத்தைப்புலி தோல்கள் இருந்ததை கண்ட போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து காரில் வந்த பெண் ஷோபா(வயது50), யூனுஸ்சுபானி சேக்(வயது25), சதீஷ்மோகன்(26) ஆகியோரை கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கைதான 3 பேரும் தானேயில் வியாபாரி ஒருவரிடம் ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்திற்கு மான், சிறுத்தைப்புலி தோலை விற்க வந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story