புத்தாண்டு கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் விபத்தில் பலி
புதுவையில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பியபோது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீரப்பாளையம் ராயப்புரம் குளத்துமேட்டு வீதி சின்னையன் என்பவரின் மகன் செல்வகணபதி (வயது19). கொள்ளிடம் தக்கால் காயிதே மில் வீதியை சேர்ந்த சாகுல் அமீது மகன் அப்துல்ரகுமான் (20). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் சிதம்பரம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்த நிலையில் செல்வகணபதியும், அப்துல்ரகுமானும் நேற்று முன்தினம் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். புத்தாண்டை கொண்டாடிவிட்டு புதுவையில் உள்ள நண்பர் வீட்டில் தங்கினார்கள். பின்னர் அதிகாலையில் புதுவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
அரியாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலம் அருகே வந்தபோது நாய் ஒன்று குறுக்கே வந்ததாக தெரிகிறது. அப்போது நாய் மீது மோதால் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பியபோது தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து செல்வகணபதி, அப்துல்ரகுமான் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்கள் இருவரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வகணபதியும், அப்துல்ரகுமானும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமு, உதவி சப்–இன்ஸ்பெக்டர் அருணாசலம் ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.