ஊட்டி அருகே பைகமந்துவில் 10 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு
ஊட்டி அருகே பைகமந்து கிராமத்தில் நள்ளிரவில் 10 வீடுகளின் பூட்டை உடைத்து திருடி உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள பைகமந்து கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு, பாதயாத்திரையாக பழனிக்கும், சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கும் நேற்று முன்தினம் சென்று இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கிராம மக்கள் வழக்கம் போல் நடமாடிய போது, பக்கத்து வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்தனர். மொத்தம் 10 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில், ஊட்டி லவ்டேல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டு உடைக்கப்பட்ட வீடுகளுக்குள் சென்று பார்வையிட்டனர். அப்போது பீரோவில் துணிமணிகள் சிதறி கீழே கிடந்தன. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் போஜன் (வயது 56) என்பவரது வீட்டில் ரூ.35 ஆயிரம் ரொக்கம், ஒரு பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.
மேலும் சில வீடுகளில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த பட்டு புடவைகள், வெள்ளி கொலுசுகள், தங்க நகைகள் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டதாக புகார்கள் எழுந்தன. கோவில் மற்றும் வெளியூர்களுக்கு சென்ற கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வந்த பின்னரே திருட்டு போன மொத்த பணம், நகை குறித்த முழு விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடுகளில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, பைகமந்து கிராமத்தில் மோப்ப நாய் சில இடங்களுக்கு சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
ஊட்டி அருகே கிராமத்தில் நள்ளிரவில் ஆட்கள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, ஒரே சமயத்தில் மர்ம ஆசாமிகள் 10 வீடுகளில் கைவரிசை காட்டி இருப்பது கிராம மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களா? என்பது குறித்து லவ்டேல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.