தூத்துக்குடி என்ஜினீயர் கொலை வழக்கில் நெல்லை சட்டக்கல்லூரி மாணவி கைது 7 மாதங்களுக்கு பிறகு போலீசார் நடவடிக்கை
தூத்துக்குடி கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில் நெல்லை சட்டக்கல்லூரி மாணவியை 7 மாதங்களுக்கு பிறகு போலீசார் நேற்று கைது செய்தனர்.
நெல்லை,
தூத்துக்குடி கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில் நெல்லை சட்டக்கல்லூரி மாணவியை 7 மாதங்களுக்கு பிறகு போலீசார் நேற்று கைது செய்தனர்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் மாயம்தூத்துக்குடி ரைஸ்மில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் முத்துகிருஷ்ணன்(வயது 47). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று நீண்டகாலமாக அங்கு வசித்து வந்தார். இவருடைய மனைவி முத்துசெல்வி. ஊருக்கு திரும்பி வந்த கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்தனர். விவாகரத்து பெறுவதற்காக முத்துகிருஷ்ணன், பாளையங்கோட்டையை சேர்ந்த ஒரு வக்கீலை நாடினார். கடந்த ஆண்டு மே மாதம் 22–ந் தேதி பாளையங்கோட்டைக்கு வக்கீலை பார்க்க செல்வதாக கூறிவிட்டு காரில் சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவருடைய தாய் அம்மைமுத்து அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் மேலூரை சேர்ந்த லாரி டிரைவர் ராஜகோபால், முத்துகிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.
கொன்று மூழ்கடிப்புஇதைத் தொடர்ந்து ராஜகோபாலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜகோபால் மனைவி பாண்டி துரைச்சி(22) சட்டக்கல்லூரியில் படித்து வருவதும், பாளையங்கோட்டையை சேர்ந்த ஒரு வக்கீலிடம் உதவியாளராக சேர்ந்து வக்கீல் பயிற்சி எடுத்து வந்தபோது அங்கு வந்த முத்துகிருஷ்ணனுக்கும், பாண்டிதுரைச்சிக்கும், இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதை கண்டித்தும் கேட்காததால் ராஜகோபால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முத்துகிருஷ்ணனை கொன்று நெல்லை அருகே ராஜவல்லிபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டான் குழியில் உடலை காருடன் மூழ்கடித்து விட்டது ஜூலை மாதம் தெரிய வந்தது.
சட்ட மாணவி கைதுஇந்த வழக்கில் ராஜகோபால் மற்றும் அவருடைய கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராஜகோபாலின் மனைவி பாண்டி துரைச்சி மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பாளையங்கோட்டை போலீசார், 7 மாதங்களுக்கு பிறகு பாண்டி துரைச்சியை நேற்று கைது செய்தனர்.
செலவுக்கு பணம் இல்லாததால் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த விவரத்தை கண்டுபிடித்து போலீசார் அதன் அடிப்படையில் பாண்டி துரைச்சி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.