காரில் தப்ப முயன்றதால் பரபரப்பு பா.ஜனதா தொண்டர் கொலையில் 4 பேர் கைது
பா.ஜனதா தொண்டர் கொலையில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 4 பேரும் காரில் தப்ப முயன்றதால் போலீசார் துரத்தி சென்று, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர்.
மங்களூரு,
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே காட்டிபள்ளா பகுதியை சேர்ந்தவர் தீபக் ராவ் என்கிற தீபு (வயது 22). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் ‘சிம்கார்டு‘ விற்பனை பிரதிநிதியாக வேலைபார்த்து வந்தார். மேலும் இவர் பா.ஜனதா தொண்டர் ஆவார். இவர் சூரத்கல்லில் இருந்து கிருஷ்ணாபுரா நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை காரில் வந்த 4 மர்மநபர்கள் வழிமறித்தனர். மேலும் தீபக் ராவின் முகத்தில் மிளகாய் பொடி தூவிய மர்மநபர்கள், தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி,துடித்து செத்தார்.
இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்த சூரத்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் வந்த 4 பேர், தீபக் ராவை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொலையாளிகள் வந்த காரின் பதிவு எண்ணும் போலீசாருக்கு தெரிந்தது. உடனே கொலையாளிகளை பிடிக்க மங்களூரு நகரின் அனைத்து சோதனை சாவடிகளையும் போலீசார் உஷார் படுத்தினர். அதேப் போல் முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மங்களூருவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருபுரா கைகம்பா பகுதியில் ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் 4 பேர் நிற்பதாக சூரத்கல் போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தாராம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மர்மநபர்கள் 4 பேரும் காரில் ஏறி அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.
இதனால் போலீசாரும் தங்களது வாகனத்தில் அவர்களை துரத்தினர். சினிமா பட பாணியில் மர்மநபர்களின் காரும், அதைதொடர்ந்து போலீசாரும் காரும் சீறிப்பாய்ந்தன. மர்மநபர்களின் கார் கைகம்பா காட்டுப் பகுதியில் புயல் வேகத்தில் பறந்தது. இருப்பினும் அவர்களை விடாமல் போலீசாரும் வாகனத்தில் துரத்தி சென்றபடி இருந்தனர். இறுதியில் மர்மநபர்களின் கார், காட்டுப்பகுதியில் பாதை இல்லாததால் முட்புதரில் சிக்கி நின்றது.
உடனே காரில் இருந்தவர்களை இன்ஸ்பெக்டர் சாந்தாராம் மற்றும் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது மர்மநபர்கள் அவர்களை தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் சாந்தாராமின் கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் சாந்தாராம் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு, சரண் அடையும் படி எச்சரித்தார். அதையடுத்து மர்மநபர்கள் 4 பேரும் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
கைதானவர்களில் 3 பேரின் பெயர்களை மட்டுமே போலீசார் தெரிவித்தனர். அதாவது கிண்ணிகோழி பகுதியை சேர்ந்த நவுசாத் (30), நவாஜ் (30), ரிஜ்வான் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. ஒருவரின் பெயரை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இவர்கள் 4 பேருக்கும், தீபக் ராவுக்கும் இடையே விளம்பர பலகை வைப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததும், அந்த முன்விரோதத்தில் 4 பேரும் சேர்ந்து தீபக் ராவை வெட்டிக் கொன்றதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா பட பாணியில் காரில் தப்ப முயன்ற கொலையாளிகள் 4 பேரையும் போலீசார் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.