ஆரோவில், தினகரன் பண்ணை வீட்டில் மீண்டும் வருமான வரி அதிகாரிகள் சோதனை
டி.டி.வி.தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தினார்கள். ஏற்கனவே சீல் வைத்த அறைகளை திறந்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
வானூர்,
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பொம்மையார்பாளையத்தில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி.தினகரனுக்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு மாட்டுப்பண்ணை, விவசாய தோட்டங்கள், முந்திரி தோப்புகளுடன் நவீன வசதிகளுடன் கூடிய பங்களாவும் உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 9–ந்தேதி சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் அவர்களது உறவினர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி ஆவணங்களை எடுத்துச் சென்றனர். அதேபோல் ஆரோவில் அருகே பொம்மையார்பாளையத்தில் உள்ள டி.டி.வி.தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் புதுச்சேரி, சென்னையில் இருந்து வந்து வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அங்கு வேலை செய்து வந்த ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை புதுச்சேரி, சென்னையில் இருந்து பொம்மையார்பாளையத்தில் உள்ள டி.டி.வி. தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு வந்தனர். அங்கு அவர்கள் வீட்டில் வேலை செய்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு கதவுகளை மூடி விட்டு அங்குள்ள அறைகளில் சோதனை நடத்தினர். கடந்த நவம்பர் மாதம் நடத்திய சோதனையின் போது இந்த பண்ணை வீட்டில் இருந்து பல ஆவணங்கள் கிடைத்ததாகவும், அப்போது அந்த அறைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்து விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த அறைகளை திறந்து அதில் இருந்த ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் நேற்று ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை வரை இந்த சோதனை நீடித்தது. இதன்பின் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் சோதனை நடத்தப்பட்ட விவரங்களை செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கார்களில் திரும்பிச் சென்றுவிட்டனர்.
இதையொட்டி ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் பண்ணை வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வருமானவரி சோதனை பற்றி தகவல் அறிந்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆரோவில் அருகே பொம்மையார்பாளையத்தில் டி.டி.வி. தினகரன் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.