டி.டி.வி.தினகரனின் பண்ணை வீட்டில் 2–வது நாளாக வருமான வரி அதிகாரிகள் சோதனை
பொம்மையார்பாளையத்தில் உள்ள டி.டி.வி. தினகரனின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 2–வது நாளாக சோதனை நடத்தினார்கள். கார் செட்டின் தரை தோண்டி அவர்கள் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வானூர்,
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பொம்மையார்பாளையத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமாக சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய பண்ணை வீடு உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 9–ந்தேதி சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் அவர்களது உறவினர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி, சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பொம்மையார்பாளையத்தில் உள்ள டி.டி.வி. தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு வந்தனர். கடந்த நவம்பர் மாதம் நடத்திய சோதனையின் போது இந்த வீட்டில் இருந்து பல ஆவணங்கள் கிடைத்ததாகவும், அதனை ஒரு அறையில் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்து விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய சோதனையின் போது இந்த ஆவணங்களை எடுத்து வருமானவரி அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தெரிகிறது. இந்த சோதனை நேற்று முன்தினம் மாலை வரை நீடித்தது. இதன்பின் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் சோதனை நடத்தப்பட்ட விவரங்களை செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்தநிலையில் டி.டி.வி. தினகரனின் பண்ணை வீட்டின் கார் செட்டில் முக்கிய ஆவணங்களை பூமிக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாக வருமான வரி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து புதுவை வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் நேற்று காலை அந்த பண்ணை வீட்டிற்கு சென்றனர். அங்குள்ள கார் செட்டிற்கு சென்று அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.
இதற்காக கொண்டு வரப்பட்டு இருந்த விசேஷ கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்த பிறகு சந்தேகத்துக்குரியதாக கருதப்படும் இடங்களில் கடப்பாரை கம்பியால் தோண்டிப் பார்த்தனர். ஆனால் எந்த ஆவணமும் கிடைக்காததால் மதியம் 2 மணி அளவில் அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சோதனையையொட்டி ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டி.டி.வி. தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 2–வது நாளாக சோதனை நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.