கோலாலம்பூருக்கு “ஹாட்பாக்ஸ்”களில் மறைத்து கடத்த முயன்ற ரூ.11 கோடி போதைப்பொருள் பறிமுதல்


கோலாலம்பூருக்கு “ஹாட்பாக்ஸ்”களில் மறைத்து கடத்த முயன்ற ரூ.11 கோடி போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Feb 2018 4:30 AM IST (Updated: 1 Feb 2018 5:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு விமானத்தில் “ஹாட்பாக்ஸ்“களில் மறைத்து கடத்த முயன்ற ரூ.11¾ கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செம்பட்டு,

திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் குற்றப்பிரிவு போதை தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு கோலாலம்பூர் செல்லும் விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த சென்னை போலீசாருக்கு கோலாலம்பூர் செல்ல இருந்த பயணி ஒருவர் பெரிய சூட்கேசை கையில் பிடித்தபடி நின்று கொண்டு இருப்பதை பார்த்து, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த சென்னை போலீசார் மற்றும் திருச்சி விமான நிலைய அதிகாரிகள், அந்த நபரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக்பாட்சா(வயது 27) என்று தெரிய வந்தது. மேலும் அவரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

கைது

இதைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த சூட்கேசை திறந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 25 ஹாட்பாக்ஸ்கள் இருந்தன. அந்த ஹாட்பாக்ஸ்களை திறந்து பார்த்தபோது, ஹாட்பாக்சில் வைக்கப்பட்டு இருக்கும் தெர்மாகோல் உள்ள இடத்தில் சந்தேகப்படும்படியாக வினோதமான பொருள் இருப்பது தெரிந்தது. அதை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தபோது, அது எபிட்டன் என்ற போதைப்பொருள் என்று தெரிந்தது. அவை மொத்தம் 11¾ கிலோ இருந்தது.

இதைத்தொடர்ந்து சாதிக்பாட்சாவை போலீசார் கைது செய்து, அவர் கடத்த முயன்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ஒரு கிலோ ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. அதன்படி ரூ.11¾ கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாதிக்பாட்சாவை போலீசார் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர். 

Next Story