இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்


இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 1 Feb 2018 6:45 AM IST (Updated: 1 Feb 2018 6:45 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் தொடர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து தினமும் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய மீனவர்களுக்கு எதிரான புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. எல்லைத்தாண்டி இலங்கை பகுதிகளில் மீன்பிடித்து சிறைபிடிக்கப்பட்டால் ரூ.50 லட்சம் முதல் ரூ.7 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது இந்திய மீனவர்களுக்கு முற்றிலும் எதிரான சட்டம். இதனால் இந்த சட்டத்தை இலங்கை அரசு திரும்ப பெற மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் மத்திய அரசு இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மற்றும் அவர்களது விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என மீனவர்கள் தெரிவித்தனர்.

3-வது நாளாக தொடர் போராட்டம்

மேலும் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடந்த 29-ந்தேதி (திங்கட்கிழமை) தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் தொடர் போராட்டம் காரணமாக மீன்பிடி தளங்கள் வெறிச்சோடி காணப் படுகிறது. 

Next Story