அச்சக உரிமையாளர் கொலை வழக்கில் ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 2 பேர் கைது


அச்சக உரிமையாளர் கொலை வழக்கில் ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2018 4:30 AM IST (Updated: 2 Feb 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு தேவிகாபுரத்தில் அச்சக உரிமையாளர் கொலை வழக்கில் ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேத்துப்பட்டு,


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரம் வம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 49), தேவிகாபுரத்தில் அச்சகம் நடத்தி வந்தார். மேலும் அங்கு ஜெராக்ஸ் கடையும் இணைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி விருதாம்பாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு தேவிகாபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சங்கர் கடந்த 21–ந் தேதி தேவிகாபுரம் அருகில் உள்ள மலையடிவாரத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் இந்த சம்பவம் குறித்து போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.


சங்கரின் மனைவி விருதாம்பாள், மகள்கள், உறவினர்கள், அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் சங்கரின் செல்போன் சிம்கார்டுகளையும் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சங்கரின் கொலையில் தேவிகாபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், நிர்மல்நகரை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் 17 வயது சிறுவன் ஐ.டி.ஐ. படித்து வருகிறான். 16 வயது சிறுவன் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறான்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:–

பிடிபட்ட 2 சிறுவர்களும் நண்பர்கள். இதில் தேவிகாபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் சங்கரின் கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க செல்லும்போது ஆபாச படங்களை காண்பித்து சங்கர் அந்த சிறுவனை தன்வசப்படுத்தி நட்புரீதியாக பழகி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுவனிடம் உனது அக்கா அழகாக இருக்கிறாள், அவளை எனது ஆசைக்கு வர வை என்று சங்கர் கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன், இதுகுறித்து அவரது நண்பரான 16 வயது சிறுவனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் சங்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்.


இதையடுத்து அவர்கள் சங்கரை செல்போனில் தொடர்பு கொண்டு தேவிகாபுரம் மலை அடிவாரத்துக்கு வா வேறு பெண்ணை அழைத்து வருகிறோம் என்று கூறினர். இதை கேட்ட சங்கர் கடந்த 20–ந் தேதி இரவு 7 மணியளவில் மலை அடிவாரத்துக்கு சென்றார். அங்கிருந்த சிறுவர்கள், சங்கரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கம்பால் தாக்கி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர். இதை அவர்கள் வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீசார் சிறுவர்களை கைது செய்து திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

அச்சக உரிமையாளர் கொலை வழக்கில் ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேவிகாபுரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.


Next Story