அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் கூலித்தொழிலாளி.
அந்தியூர்,
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் உடல் நலம் சரியில்லாததால் நேற்று இரவு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளிக்க தொடங்கினார்கள். இதற்காக அங்குள்ள ஆண்கள் வார்டில் படுக்கை ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் தனக்கு சிகிச்சை அளிக்க தனி அறையில் படுக்கை ஒதுக்க வேண்டும் என்று கேட்டு டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென அங்கிருந்த 4 பூந்தொட்டிகள், நோயாளிகளை அழைத்து செல்லும் ஒரு வீல் சேர் ஆகியவற்றை தூக்கி வீசி உடைத்தார். மேலும் அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் நோயாளிகள் பயந்து போய் வார்டின் கதவை அடைத்து உள்ளேயே உட்கார்ந்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வார்டில் உள்ள கதவை ஓங்கி தட்டி உடைக்க தொடங்கினர்.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார், ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சங்கர் எங்கும் தப்பி சென்றுவிடாமல் பிடித்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்தியூர் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.