கத்தை, கத்தையாக ரூ.500 கள்ள நோட்டுகள் பறிமுதல் கடையில் மாற்ற முயன்றவர் கைது


கத்தை, கத்தையாக ரூ.500 கள்ள நோட்டுகள் பறிமுதல் கடையில் மாற்ற முயன்றவர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2018 4:30 AM IST (Updated: 17 Feb 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கத்தை, கத்தையாக ரூ.500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடையில் மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

நாகர்கோவில்,

தோவாளை வடக்கூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 27), நாகர்கோவில் வடசேரியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மதியம் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் ரூ.500 நோட்டை கிருஷ்ணகுமாரிடம் கொடுத்து சில்லரை தருமாறு கேட்டார். ஆனால் அவர் கொடுத்த ரூபாய் நோட்டு மீது கிருஷ்ணகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவேளை கள்ள ரூபாய் நோட்டாக இருக்குமோ? என்ற எண்ணத்தில் கிருஷ்ணகுமார் அவர்களிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே வடசேரி போலீசுக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் ஓட்டம் பிடித்தனர்.

உடனே போலீசாரும், மற்ற கடைக்காரர்களும் சேர்ந்து அவர்களை துரத்தி ஒருவரை மடக்கிப் பிடித்தனர். ஆனால் மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் சிவகாசி புதுக்காலனியை சேர்ந்த லட்சுமணன் (வயது 60) என்பதும், தப்பி ஓடியவர் சங்கரன் (58) என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர், கிருஷ்ணகுமாரிடம் சில்லரைக்காக கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ள ரூபாய் நோட்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லட்சுமணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் கத்தை, கத்தையாக கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததோடு லட்சுமணனையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, “லட்சுமணனும், தப்பி ஓடிய சங்கரனும் கள்ள ரூபாய் நோட்டுகளை கேரளாவை சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கி வந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள கள்ள நோட்டுகள் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும். இவற்றை குமரி மாவட்டத்தில் புழக்கத்தில் விட முயன்றபோது சிக்கியுள்ளார்கள். கைது செய்யப்பட்டுள்ள லட்சுமணன் ஏற்கனவே கேரளாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார். இதனால் அவரை கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த லட்சுமணன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் விடுதலையாகி வெளியே வந்துள்ளார். தப்பி ஓடிய சங்கரனை வலைவீசி தேடி வருகிறோம். மேலும் அவர்களுக்கு கள்ள நோட்டுகளை அச்சிட்டுக் கொடுத்த நபர் யார்? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது“ என்றனர்.


Next Story