கர்ப்பிணியை கற்பழித்து கொன்று நகைகள் கொள்ளை: வாலிபருக்கு தூக்கு தண்டனை


கர்ப்பிணியை கற்பழித்து கொன்று நகைகள் கொள்ளை: வாலிபருக்கு தூக்கு தண்டனை
x
தினத்தந்தி 21 Feb 2018 4:11 AM IST (Updated: 21 Feb 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணியை கற்பழித்து கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மங்களூரு,

உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவை சேர்ந்தவர் இந்திரா. திருமணமான இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி இந்திரா தனது வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த ஒருவர், இந்திராவின் வீட்டுக்குள் நுழைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்திரா, ‘யார் நீங்கள், உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அப்போது அந்த நபர், வீட்டுக்குள் சென்று இந்திராவை வாயை பொத்தி அங்கிருந்து தூக்கி சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திரா, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டார். இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த அந்த நபர், இந்திராவை மறைவான பகுதிக்கு கடத்தி சென்று அங்கு வைத்து அவரை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது. பின்னர் அவரை கொடூரமாகவும் தாக்கி உள்ளார்.

இதையடுத்து, இந்திராவை உயிருடன் விட்டால் தன்னை போலீசில் காட்டி கொடுத்துவிடுவார் என்று பயந்த அந்த நபர், அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து இந்திராவின் தலையில் போட்டு கொலை செய்தார். பின்னர், இந்திரா அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் வெளியே சென்றிருந்த இந்திராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது இந்திரா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் அக்கம்பக்கத்தில் இந்திராவை தேடி பார்த்தனர்.

அப்போது வீட்டின் அருகே உள்ள மறைவான பகுதியில் இந்திரா அரைநிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் இந்திராவின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் யாரோ மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து இந்திராவை கடத்தி சென்று கற்பழித்து கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இந்திராவின் குடும்பத்தினர் குந்தாப்புரா போலீசில் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து குந்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விரைந்து செயல்பட்டு மறுநாளே அதாவது 12-ந்தேதியே குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில், அவர் அதேப்பகுதியை சேர்ந்த பிரசாந்த் மொகவீரா (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் விசாரணைக்கு பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது உடுப்பி கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உடுப்பி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர், இந்திராவை கற்பழித்துக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். இந்த நிலையில், கைதான பிரசாந்த் மொகவீராவுக்கு அதிகப்பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரி மகளிர் அமைப்பினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிபதி, 20-ந்தேதி (அதாவது நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறினார். அதன்படி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பிரசாந்த் மொகவீராவுக்கு எதிராக 23 சாட்சிகள் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொஞ்சமும் மனிதாபிமானமும் இன்றி, கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் குற்றவாளி பிரசாந்த் மொகவீரா கொடூரமாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு கற்பழிப்பு குற்றத்திற்காக 10 ஆண்டு சிறையும், ரூ.40 ஆயிரம் அபராதமும், நகைகளை கொள்ளையடித்ததற்கு 10 ஆண்டு சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், கடத்தல் குற்றத்திற்கு 4 ஆண்டு சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

மேலும் இந்திராவையும், அவருடைய வயிற்றில் இருந்த வெளிஉலகை பார்க்காத 5 மாத சிசுவையும் கொன்ற குற்றத்திற்காக பிரசாந்த் மொகவீராவுக்கு தூக்கு தண்டனையும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக ரவிகிரண் முருடேஸ்வர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்குக்காக அவர், இந்திரா குடும்பத்தினரிடம் எந்தவித பணமும் வாங்காமல் வாதாடியது குறிப்பிடத்தக்கது. 

Next Story