மடிகேரி வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்


மடிகேரி வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2018 5:39 AM IST (Updated: 25 Feb 2018 5:39 AM IST)
t-max-icont-min-icon

குடகு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி நேற்று மடிகேரியில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடகு,

குடகு மாவட்டத்தில் பல ஆண்டுகளாக காட்டு யானைகள் அட்டகாசம் இருந்து வருகின்றன. இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தாலும் அவை, காபி தோட்டங்களில் முகாமிட்டு தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் தாக்கி ஏராளமான தொழிலாளிகள் உயிரிழந்தனர். மேலும், ஆடு, மாடுகளும் செத்துள்ளன. இதனால் அந்தப்பகுதி மக்கள் விவசாய பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் கடும் அவதியில் உள்ளனர்.

இந்த நிலையில், காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, வனப்பகுதிகளை சுற்றி சோலார் மின்வேலி அமைப்பது, அகழிகள் தோண்டுவது போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஆனாலும், யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது மட்டும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி நேற்று மடிகேரியில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வனத்துறையினருக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். முன்னதாக விவசாயிகள், மடிகேரி டவுனில் ஊர்வலமாக சென்று வனத்துறை அலுவலகத்தை வந்தடைந்தனர். இந்த போராட்டத்தின்போது அவர்கள் கூறுகையில், ‘குடகு மாவட்டத்தில் பல ஆண்டுகளாக காட்டு யானைகள் அட்டகாசம் இருந்து வருகிறது. இந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்டியடிக்க பல்வேறு கோரிக்கை விடுத்தாலும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் காட்டு யானைகள் தாக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான ஆடுகள், மாடுகள் செத்துள்ளன. மேலும் விவசாய பயிர்களும் சேதமடைந்துள்ளன. இதனால் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வேண்டும். பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் தக்க நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி அறிந்ததும், வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறுகையில், காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டியடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், அவை தோல்வியிலேயே முடிந்துள்ளன. நாங்களும் காட்டு யானைகளை கிராமங்களுக்குள் நுழைய விடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தற்போது, வனப்பகுதியை சுற்றி ரெயில்வே தண்டவாளங்களை தடுப்பு வேலிகளாக அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்காக ரெயில்வே நிர்வாகத்திடம் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் ரெயில்வே தண்டவாளங்கள் வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story