கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரே‌ஷன் அரிசி, மண்எண்ணெய் பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரே‌ஷன் அரிசி, மண்எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 6 March 2018 11:00 PM GMT (Updated: 6 March 2018 7:38 PM GMT)

நித்திரவிளை, திங்கள்சந்தை பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரே‌ஷன் அரிசி, 250 லிட்டர் மண்எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அழகியமண்டபம்,

குமரி மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் விற்கப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.

இந்தநிலையில், நேற்று மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நித்திரவிளை அருகே கிராத்தூர் ஏ.வி.எம். கால்வாய் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில்  உள்ள தென்னந்தோப்பில் சிறு, சிறு மூடைகளில் 700 கிலோ ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டனர். இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபோல், அதிகாரிகள் குழுவினர் திங்கள்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வாளோடு பகுதி வழியாக கேரளாவுக்கு ரே‌ஷன் மண்எண்ணெய் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது, ஒரு காரில் 250 லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மண்எண்ணெய் உடன் காரையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெயை குளச்சலில் உள்ள அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கொல்லங்கோடு அருகே பொழியூரில் குமரியில் இருந்து கடத்தி சென்ற 500 லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெயை கேரள போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story