ரஜினிகாந்த் பேச்சுக்கு பதில்: யார் நல்ல தலைவர் என்பதை தேர்தல் நேரத்தில் மக்கள் முடிவு செய்வார்கள்


ரஜினிகாந்த் பேச்சுக்கு பதில்: யார் நல்ல தலைவர் என்பதை தேர்தல் நேரத்தில் மக்கள் முடிவு செய்வார்கள்
x
தினத்தந்தி 7 March 2018 4:30 AM IST (Updated: 7 March 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் வெற்றிடம் பற்றி ரஜினிகாந்த் பேசியதற்கு பதில் அளித்த டி.டி.வி.தினகரன், “யார் நல்ல தலைவர் என்பதை தேர்தல் நேரத்தில் மக்கள் முடிவு செய்வார்கள்” என்று கூறினார்.

திருச்சி,

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று தேனி சென்றார். திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் அவருக்கு தினகரன் அணி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட ஏராளமான நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-

அரசியலுக்கு புதிதாக வரும் நடிகர்கள் தங்களை நிலைநிறுத்தி கொள்வதற்காக எம்.ஜி.ஆரை பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தும் பேசி இருக்கிறார். எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம். சில நேரங்களில் தி.மு.க.வினர் கூட எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகவும், அந்த இடத்திற்கு நல்ல தலைவர் வரவேண்டும் என்றும் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். யார் நல்ல தலைவர் என்பதை தேர்தல் நேரத்தில் மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தைரியத்தில் எச்.ராஜா பெரியார் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். அவர் தன்னைத்தானே தரம் தாழ்த்தி கொள்ளும் வகையில் நடந்து கொள்கிறார். அவருக்கு மக்கள் உரிய நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள். பெரியார் சாதி ஒழிப்பிற்காகவும், பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகவும் தனது இறுதிகாலம் வரை போராடினார். அதன் காரணமாகவே காழ்ப்புணர்ச்சியோடு அவரை பற்றி பா.ஜ.க.வினர் பேசுகிறார்கள்.

இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தாலும், தமிழகத்தில் அவர்களால் ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இது திராவிட மண். திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.

தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறலாம், அல்லது தோல்வி அடையலாம். தோல்வி ஏற்பட்டதற்காக கம்யூனிஸ்டு கட்சியை திரிபுராவில் அழிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பெரம்பலூர் நான்குசாலை சந்திப்பு பகுதியில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் டி.டி.வி.தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “இந்திய அளவில் 3-வது அணி அமைக்க மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். அதில், இணைய அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த 3-வது அணியில் நாங்கள் இணையமாட்டோம். அவ்வாறு 3-வது அணி அமையும்பட்சத்தில், தேர்தல் நேரத்தில் அதுபற்றி முடிவு செய்வோம்” என்றார். 

Next Story