திண்டுக்கல் அருகே தீ விபத்து: 2 கார்கள் எரிந்து நாசம்


திண்டுக்கல் அருகே தீ விபத்து: 2 கார்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 7 March 2018 10:00 PM GMT (Updated: 7 March 2018 7:33 PM GMT)

திண்டுக்கல் அருகே நடந்த தீ விபத்தில் 2 கார்கள் எரிந்து நாசமானது.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் இருந்து செட்டிநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள சத்யா நகரை சேர்ந்தவர் சேட் (வயது 40). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். மேலும் மிகவும் பழைய கார்களை தனித்தனியாக பிரித்து அதன் உதிரி பாகங்களை இரும்பு கடைகளுக்கு அனுப்புகிறார்.

இந்தநிலையில் நேற்று தனது வீட்டின் முன்பகுதியில் 5 கார்களை நிறுத்தி வைத்திருந்தார். அதன் அருகே பழைய காரின் உதிரி பாகங்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நேற்று மதியம் அவருடைய வீட்டின் அருகே காய்ந்து கிடந்த புற்களில் திடீரென தீ பிடித்தது. உடனே அங்கிருந்த கார் உதிரிபாகங்களுக்கும் தீ பரவியது.

இதை யாரும் கவனிக்காததால் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களிலும் மளமளவென தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓடி வந்து தீயை அணைக்க தொடங்கினர். மேலும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் வருவதற்குள் 2 கார்களும் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story