லோக் அயுக்தா நீதிபதிக்கு கத்திக்குத்து: துணை போலீஸ் கமி‌ஷனர் பணி இடைநீக்கம்


லோக் அயுக்தா நீதிபதிக்கு கத்திக்குத்து: துணை போலீஸ் கமி‌ஷனர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 9 March 2018 5:10 AM IST (Updated: 9 March 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள எம்.எஸ். கட்டிடத்தில் லோக் அயுக்தா அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

பெங்களூரு,

லோக் அயுக்தா அலுவலகத்துக்குள் நுழைந்து நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை தேஜூராஜ் சர்மா நேற்று முன்தினம் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதுதொடர்பாக தேஜூராஜ் சர்மாவை விதான சவுதா போலீசார் கைது செய்து போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கத்தி குத்து காயமடைந்த விஸ்வநாத் ஷெட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட குறைபாடு தான் கத்திக்குத்து சம்பவத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் விதான சவுதா பாதுகாப்பு பிரிவு துணை போலீஸ் கமி‌ஷனர் யோகேசை பணி இடைநீக்கம் செய்து நேற்று போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டார்.

மேலும், இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேஜூராஜ் சர்மாவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே, விஸ்வநாத் ஷெட்டியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்தை கண்டித்து நேற்று பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு முன்பு வக்கீல்களும், டவுன்ஹாலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியினரும் கண்டன போராட்டம் நடத்தினர். அப்போது, லோக் அயுக்தா நீதிபதிக்கு பாதுகாப்பு குறைவாக வழங்கப்பட்டதே, சம்பவத்துக்கு காரணம் என்று மாநில அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story