நவநிர்மாண் சேனாவுடன் காங்கிரஸ் ஒருபோதும் கூட்டணி வைக்காது


நவநிர்மாண் சேனாவுடன்  காங்கிரஸ் ஒருபோதும் கூட்டணி வைக்காது
x
தினத்தந்தி 22 March 2018 3:09 AM IST (Updated: 22 March 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

நவநிர்மாண் சேனாவுடன் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கூட்டணி வைக்காது என மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்த ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்த கூட்டணியை ஏற்படுத்த அனைத்து கட்சியினருக்கும் சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், பிரிவினைவாத அரசியலில் நம்பிக்கையுள்ள நவநிர்மாண் சேனாவுடன் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கூட்டணி வைக்காது என தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நவநிர்மாண் சேனா மக்களிடையே மொழி, இன அடிப்படையிலான பிரிவினையை தூண்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அவர்களது கொள்கைகளும் காங்கிரசின் கொள்கைகளும் முற்றிலும் வேறானவை.

அவர்கள் நடைபாதை வியாபாரிகள், பாதசாரிகள் என அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். ராஜ் தாக்கரே வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார். இவை எதுவும் மும்பையின் வளர்ச்சிக்கு கைகொடுக்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

வசாயில் குஜராத்தி மொழியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை நவநிர்மாண் சேனாவினர் சேதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. இவர்களின் வன்முறை நடவடிக்கைகளால் மும்பை நகரம் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது. இவையெல்லாம் உள்நாட்டு தீவிரவாதமேயன்றி வேறெதுவும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story