மத்திய அரசின் கைக்கூலியாக தமிழக அரசு செயல்படுகிறது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
மத்திய அரசின் கைக்கூலியாக தமிழக அரசு செயல்படுகிறது என்று ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் கனிமொழி எம்.பி. கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தி.மு.க. மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு “தலைப்புகளில் உரை” என்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்பின்னர் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் முதன் முதலாக நடக்கும் மாநாடும், செயல் திட்டமும் ஈரோட்டில் இருந்து தொடங்குகிறது. திராவிடம் விழித்து கொண்டது என தனது 13 வயதில் கருணாநிதி எழுதினார். கருணாநிதியின் பேச்சும், எழுத்தும் தமிழக மக்களின் வாழ்வுக்காக சுயமரியாதை உணர்வை ஊட்டுவதாக இருந்துள்ளது. இன்று அவர் சற்று அமைதியாக இருந்தாலும் அவரது எழுத்தும், பேச்சும்தான் இன்று வரை நம்மை வழி நடத்துகிறது.
விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோரின் கொடூரமான நிலை, சாதி, மூடநம்பிக்கை ஒழிப்பு என அனைத்து பிரச்சினைகளை பற்றி கருணாநிதி பேசவும், எழுதவும் அஞ்சியதில்லை.
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் 7 ஆயிரம் கோடி ரூபாயை கருணாநிதி தள்ளுபடி செய்தார். ஆனால், டெல்லியில் மாதக்கணக்கில் போராடிய விவசாயிகளை சந்திக்க பிரதமருக்கு ஒரு நிமிடம் நேரமில்லை.
பல நாடுகளுக்கு செல்ல நேரம் இருந்த பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லாதது, சிந்திக்க வேண்டியது. ஆனால், மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்று விவசாயிகளை சந்தித்து குரல் கொடுத்தார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் பிரச்சினைக்காக போராடும் உழைப்பாளியாக கருணாநிதி வழியில் இன்று ஸ்டாலின் உள்ளார். சில நாட்களுக்கு முன், 15-வது நிதி கமிஷன் அமைக்கப்பட்டபோது, பல மாறுதல் கொண்டு வரப்பட்டது. அதில், முக்கியமான மாறுதலாக, ‘மக்கள் தொகை குறைவாக இருக்கும் மாநிலத்துக்கு, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறையும்’, ‘மக்களுக்காக பாடுபட்டு, தனி நபர் வருவாய், தொழில் வளம், கல்வி தரம் உயர்த்தி, வேலை வாய்ப்பை உயர்த்தி இருந்தால் அந்த மாநிலத்துக்கும் மத்திய அரசிடம் இருந்து வரும் நிதித்தொகை குறைக்கப்படும்’ என்று கொண்டு வரப்பட்டு உள்ளன. நன்றாக உழைத்த மாநிலங்களுக்கு, மத்திய அரசு தண்டனை விதிப்பதாக உள்ளது.
இதை எதிர்த்து முதல் கடிதத்தை ஸ்டாலின்தான் அனுப்பினார். இதை எதிர்க்க, அ.தி.மு.க., அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியவில்லை. அந்த அரசை வழிநடத்தும் பணியும், ஸ்டாலின் தலையில்தான் விழுந்து உள்ளது. மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதை தொடர்ந்து பல மாநிலங்கள், மத்திய அரசிடம் கேள்வி கேட்க தொடங்கி உள்ளது.
இந்தியாவை வழிநடத்தும் மாநிலமாக தமிழகத்தை மு.க. ஸ்டாலின் மாற்றி உள்ளார். இதுபற்றி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது மு.க.ஸ்டாலின் நாங்களும் கடிதம் எழுதுவோம் என்றார். இந்த அளவுக்கு அலட்சியமாக தமிழக அரசு, மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறது.
டெல்லியில் தமிழகத்தை அடகு வைக்கும் நிலை, நசுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நமக்கு வேண்டாம் எனக்கூறும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு என பல திட்டங்கள் தமிழகத்தில் திணிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் உள்ள தொழிலை நசுக்கியதால், பலரும் வேலை இழந்து உள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியாது என நினைத்து, இந்த ஆட்சியிலேயே நிறைவேற்ற மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக மக்களுக்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் எதிர்க்கும் முதல் குரலாக, மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.
வெளிநாட்டில் இருக்கும் பணத்தை மீட்டு கொண்டு வந்து, இந்தியாவில் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார். ஆனால் இன்று நமது பணத்தை திருடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களுக்கு உடந்தையாக மத்திய அரசு செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதை தட்டிக்கேட்கும் திராணி உள்ள, ஒரே கட்சியாக தி.மு.க. இருக்கிறது. தமிழகத்துக்குள் பா.ஜ.க. நுழைய முடியாத இயக்கமாகவும், அரணாகவும் தி.மு.க., செயல்படும். இதுபோன்ற சதிகளை தகர்த்து தமிழக மக்களுக்கும், தமிழகத்துக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசாக தி.மு.க.வை கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story