‘நீட்’ தேர்வுக்கு தயாராகிறீர்களா?


‘நீட்’ தேர்வுக்கு தயாராகிறீர்களா?
x
தினத்தந்தி 27 March 2018 6:55 AM GMT (Updated: 27 March 2018 6:55 AM GMT)

கடந்த ஆண்டு இதே காலத்தில் ‘நீட்’ தேர்வு நடக்குமா? தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா? என்ற சூழலில் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். அது மட்டுமல்லாமல் முதன் முறையாக நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு எப்படி இருக்கும் என்பது புரியாமலும் ஒரு பதற்றம் நிலவியது.

நீட் தேர்வு மையங்களில் நடந்த சில நிகழ்வுகளும் மாணவர்களை திகைக்க வைத்தது. இவற்றிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள அவை பலனளிக்கும். பிளஸ்-2 தேர்வு அடுத்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது. ‘நீட்’ தேர்வு மே 6-ந்தேதி நடைபெறுகிறது. இடையில் ஒரு மாத இடைவெளி இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொண்டு ‘நீட்’ தேர்வை துணிவாக எதிர்கொள்ளலாம். அதற்கான சில யோசனைகள் இங்கே...

* ‘நீட்’ தேர்வில் 180 கேள்விகள் இடம் பெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களிலிருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படுகின்றன. தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் என்பதால் கவனமாக பதிலளிக்க வேண்டும்.

* பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தில் இருந்து தலா 50 சதவீத கேள்விகள் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த பாடத்திட்டங்களை ஆழ்ந்து படித்தாலே பயமின்றி தேர்வை எதிர்கொள்ளலாம். பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் கைவசம் இல்லாதவர்கள் இணையதளத்தில் படிக்கலாம். மாதிரி வினாக்களும் எக்கச்சக்கமாக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

* கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு வினா- விடைகளும் இணையத்தில் உள்ளது. அதை டவுன்லோடு செய்து பயிற்சி பெறலாம்.

* தனியார் நிறுவனங்கள் நடத்தும் போட்டித்தேர்வு மையங்களிலும் பயிற்சி பெறலாம். மாதிரி தேர்வுகளை எதிர்கொள்ளலாம்.

* ஆரம்பத்தில் இருந்து குறிப்பு எடுத்து படித்திருப்பவர்களுக்கு இப்போது சுலபமாக இருக்கும். பொதுத் தேர்வுக்காக குறிப்பெடுத்திருந்தால் இன்னும் வசதியாக இருக்கும். மீண்டும் ஒருமுறை நினைவூட்டல் மூலம் திருப்புதல் செய்தாலே எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

* இறுதி நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியமில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக விண்ணப்பத்தில் குறிப்பிட்ட அடையாள அட்டையை மறக்காமல் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

* அடையாள அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் போஸ்ட் கார்டு அளவு புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும்.

* பேனா, பென்சில், கால்குலேட்டர், பென் டிரைவ், ஏடி.எம்.கார்டு, செல்போன், புளூடூத் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

* உடையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. முழுக்கை சட்டை அணியக்கூடாது. ஷூ அணிந்து செல்லக்கூடாது.

* கடந்த ஆண்டு கடுமையான பரிசோதனை முறைக்குப் பின்பு, மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. எனவே தேர்வறை விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். நல்ல உடை, தேவையான சாதனங்கள், சான்றுகளை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.

* இதுவரை மாநில அரசு கல்லூரிகள், மத்திய அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், சில பல்கலைக்கழகங்கள் தனித்தனியே தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்தின. இப்போது நாடு முழுவதும் ஒரே தேர்வாகிவிட்டதால் தமிழக மாணவர்கள் இந்தியா முழுவதுமுள்ள கல்லூரிகளிலும், புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகளிலும் சேர முடியும்.

* நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கிடைக்காத நிலை இருந்தாலும், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற விவாதத்தின்போது தேர்வை தங்கள் பிராந்திய மொழிகளில் எதிர்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு தமிழ்மொழியில் நீட் தேர்வை எதிர்கொள்ளலாம் என்பது தமிழக மாணவர்களுக்கு தேர்ச்சி வாய்ப்பை அதிகரிக்கும் என்று நம்பலாம்.

* கடந்த ஆண்டு, நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் எதிர்கொண்ட சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான சிறப்பு பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் பள்ளிகள், போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுடன் கைகோர்த்து பயிற்சி வழங்கி வருகின்றன. இதுவும் தமிழக மாணவர்களுக்கு சிறந்த பலன் தரும் என்று நம்பலாம்.

* இன்னுமிருக்கும் காலத்தை சிறப்பாக பயன்படுத்தி பயிற்சி பெற்றால் நீங்களும் மருத்துவராகி சாதிக்கலாம். வாழ்த்துக்கள்!

Next Story