பீர்பாட்டிலால் குத்தி கொத்தனார் கொலை மனைவியின் தங்கை கணவர் உள்பட 3 பேர் கைது


பீர்பாட்டிலால் குத்தி கொத்தனார் கொலை மனைவியின் தங்கை கணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2018 4:30 AM IST (Updated: 3 April 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பீர்பாட்டிலால் குத்தி கொத்தனாரை கொலை செய்த மனைவியின் தங்கை கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை சாந்தப்பிள்ளை ரெயில்வே கேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாதவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது முகம், கழுத்து, கை போன்ற இடங்களில் பாட்டிலால் குத்தப்பட்ட ரத்தக்காயம் இருந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் ரெயில் மோதி இறந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது சாந்தப்பிள்ளை ரெயில்வே கேட் ரவுண்டானா பகுதியில் வைத்து அந்த வாலிபரை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து அவரது உடலை தூக்கி வந்து ரெயில்வே தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதில் தஞ்சை மேற்கு மற்றும் கிழக்கு போலீசார், ரெயில்வே போலீசார் ஆகியோரிடையே குழப்பம் ஏற்பட்டது. இதனால் வாலிபரின் உடலை எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது. நேரம் செல்லச்செல்ல பொது மக்கள் கூட்டம் ரெயில்வே தண்டவாளத்தில் கூட ஆரம்பித்தது. பின்னர் ஒருவழியாக ரெயில்வே போலீசாரே விசாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் வாலிபரின் உடலை ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தஞ்சை ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த கொத்தனார் ராஜா(வயது35) என்பது தெரியவந்தது. ராஜாவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் தனது மனைவியின் 3-வது சகோதரியை திருமணம் செய்து வைக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொடுக்க மாமனார் வீட்டில் மறுத்து விட்டனர்.

இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட ராஜாவுக்கும், அவரது மனைவியின் 2-வது தங்கை கணவர் பூக்காரத்தெருவை சேர்ந்த மனோகருக்கும்(30) இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மனோகரும், அவரது நண்பர்களும் சாந்தப்பிள்ளை கேட் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது அங்கே ராஜா வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மனோகர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜாவை கட்டையால் தாக்கினார்.

அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ரெயில்வே தண்டவாளத்தில் ஓடியபோது ராஜா தவறி கீழே விழுந்தார். உடனே அருகில் கிடந்த பீர்பாட்டிலை எடுத்து தலை, முகம், கை போன்ற இடங்களில் சரமாரியாக மனோகர் மற்றும் அவரது நண்பர்கள் ராஜாவை குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டது விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் தங்களை தேடுவதை அறிந்த மனோகர் மற்றும் அவரது நண்பர்கள் மாரியம்மன் கோவிலை சேர்ந்த சரவணராஜா(27), பூக்கொலையை சேர்ந்த செந்தில்குமார்(30) ஆகியோர் புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் சங்கரிடம் சரண் அடைந்தனர். அவர், 3 பேரையும் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார், மனோகர் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story