நெல்லையில் 4 மாத ஆண் குழந்தை கடத்தல்


நெல்லையில் 4 மாத ஆண் குழந்தை கடத்தல்
x
தினத்தந்தி 3 April 2018 5:00 AM IST (Updated: 3 April 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 4 மாத குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்து கடத்திச்சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் மர்மநபர் ஒருவர் நேற்று மாலை நடந்து சென்று கொண்டு இருந்தார். அவர் கையில் பெரிய பிளாஸ்டிக் பை வைத்து இருந்தார். ஆட்டோ நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பையில் இருந்து ஒரு குழந்தை அழும் குரல் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்கள் அந்த நபரை வழி மறித்து, பையை சோதனை செய்தனர். அதில் 4 மாதமே ஆன அழகான ஆண் குழந்தை இருந்தது. அவர் அந்த பையில் வைத்து குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. உடனடியாக டிரைவர்கள் அந்த நபரை பிடித்து சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர், பாவூர்சத்திரத்தை சேர்ந்த முருகேசன் (வயது 47) என்பதும், அவர் அந்த குழந்தையை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அவரை நெல்லை சந்திப்பு போலீசார் கைது செய்தனர். அந்த குழந்தையை நெல்லை சந்திப்பில் உள்ள சரணாலயத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அது யாருடைய குழந்தை? எந்த ஊரில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்த குழந்தை நல அலுவலர் தேவ்ஆனந்த் சரணாலயத்துக்கு சென்று குழந்தையை பார்த்தார். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது. உடனடியாக அவர், குழந்தையை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story