காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 April 2018 10:45 PM GMT (Updated: 3 April 2018 8:50 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சூளகிரி, போச்சம்பள்ளியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூளகிரி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசையும், அதற்கு துணைபோகும் தமிழக அரசையும் கண்டித்து, வருகிற 5-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சூளகிரி புதிய பஸ் நிலையத்தில், மேற்கு மாவட்ட செயலாளரும், தளி எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ், வேப்பனபள்ளி பி.முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேற்்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாநில சிறுபான்மையினர் நல பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஏ.சத்யா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வீராரெட்டி, சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், நாகேஷ், ஓசூர் நகர செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய, மற்றும் தமிழக அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த பஸ்களை மறித்து, தரையில் படுத்தவாறு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசாருக்கும், மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ.க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஒரு தொண்டர் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்து கலந்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அதனை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தி.மு.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போச்சம்பள்ளியில் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, மத்தூர் ஒன்றிய செயலாளர் பொன் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் தட்ரஅள்ளி நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. நரசிம்மன், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். 

Next Story