காங்கிரஸ் இல்லாத இந்தியா - மோடியின் ஆசை சாத்தியமா?


காங்கிரஸ் இல்லாத இந்தியா - மோடியின் ஆசை சாத்தியமா?
x
தினத்தந்தி 15 April 2018 12:33 PM IST (Updated: 15 April 2018 12:33 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ்... நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சி என்ற பெருமையை பெற்ற மாபெரும் தேசிய இயக்கம்.

“இந்தியா என்றால் காங்கிரஸ்; காங்கிரஸ் என்றால் இந்தியா” என்று இருந்த காலம் ஒன்று உண்டு. கண்ணுக்கு எட்டிய தூரம் காங்கிரசுக்கு வலுவான எதிரிகளே இல்லாமல் இருந்த காலம் அது.

கடந்த சில ஆண்டுகள் வரை நாடு முழுவதும் காங்கிரசுக்கு வலுவான அடித்தளம் இருந்தது. நகரங்களை விட கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கு பெற்று விளங்கியது.

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952 முதல் 1977 வரை தொடர்ந்து கால் நூற்றாண்டாக இந்த தேசத்தை காங்கிரஸ்தான் ஆண்டது.

காலப்போக்கில் நிலைமை மாறியது. வலதுசாரி இயக்கமான ஜனசங்கம், பாரதீய ஜனதாவாக உருமாற்றம் பெற்று விஸ்வரூபம் எடுக்க தொடங்கிய பின் காங்கிரசின் செல்வாக்கு குச்சி ஐஸ் போல் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியது.

இந்திராகாந்தி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலை காங்கிரசுக்கு வேட்டு வைப்பதாக அமைந்தது. நெருக்கடி நிலையால் ஏற்பட்ட பாதிப்பில் உருவான ஜனதா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்த போதிலும், அந்த ஆட்சி 3 ஆண்டுகளில் அற்பஆயுளில் முடிந்தது.

எதிர்க்கட்சிகளின் கூட்டாஞ்சோறு அரசியலால் வெறுத்துப்போன மக்களின் பார்வை மீண்டும் காங்கிரஸ் பக்கம் திரும்பியது. 1980-ல் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய போதிலும் அதன்பிறகு அக்கட்சியின் செல்வாக்கு ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.

நெருக்கடிநிலை காலம் வரை அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக இருந்த காங்கிரஸ், அதன்பிறகு விழுவதும்-எழுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

காங்கிரஸ் தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தி, மந்தமான தொழில் வளர்ச்சி, நாட்டில் அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கம், ஊழல் போன்ற காரணங்கள் பாரதீய ஜனதாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தன.

ராமஜென்ம பூமி விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதும் பாரதீய ஜனதாவின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற இந்த விவகாரம் அக்கட்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதுதவிர பிராந்திய கட்சிகளின் தோற்றமும், வளர்ச்சியும் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தின.

குறிப்பாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆந்திராவில் தெலுங்கு தேசம், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாளம், பஞ்சாபில் அகாலிதளம் என்று நாடு முழுவதும் ஆங்காங்கே தோன்றிய புதிய கட்சிகள் தேசிய கட்சிகளின் வாக்கு வங்கியை குறிப்பாக காங்கிரசின் வாக்கு வங்கியை கபளகரம் செய்தன.

இந்த பிராந்திய கட்சிகளில் சில அண்டை மாநிலங்களிலும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன.

2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு மீது 2ஜி ஊழல் புகார், தெற்காசிய விளையாட்டு போட்டி ஊழல் புகார் என அடுக்கடுக்காக பல்வேறு ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன.

இதனால் 2014-ல் நடந்த 16-வது நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ், சக்கரவியூகத்தில் சிக்கிய அபிமன்யூ போல ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தது. இதற்கு அந்த கட்சி மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டி இருந்தது.

இதுவரை இல்லாத அளவுக்கு அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 543 இடங்களில் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரசால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாமல் போய்விட்டது.

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்தார்கள். அந்த கூட்டணி 336 தொகுதிகளை கைப்பற்றியது. பாரதீய ஜனதா மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது பதிவான வாக்குகளில் 31 சதவீதம் ஆகும்.

வரலாறு காணாத வெற்றியை பெற்று அசுரபலத்துடன் இருந்த போதிலும், கூட்டணி கட்சிகளையும் மந்திரிசபையில் சேர்த்து அரவணைத்துக் கொண்டதை பாரதீய ஜனதாவின் ராஜதந்திரம் என்றும் சொல்லலாம்.

1984-க்கு பிறகு தனிக்கட்சி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது கடந்த தேர்தலில்தான். இடைப்பட்ட 20 ஆண்டுகளில், மாறுபட்ட கொள்கைகளை கொண்ட கட்சிகள்தான் கரம் கோர்த்து கூட்டணி அமைத்து ஆட்சித்தேரை நகர்த்தி வந்தன.

காங்கிரசின் மீது இருந்த அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக வாக்குகளாக மாற்ற 2014 தேர்தலில் நரேந்திர மோடியும், பாரதீய ஜனதா தலைவரான ராஜ்நாத் சிங்கும் வகுத்த உத்திகள் நல்ல பலனை கொடுத்தன.

குறிப்பாக மோடியின் வசீகரமான பேச்சுத்திறனும், அவருக்கு இருக்கும் ஊழல் கரைபடியாதவர் என்ற பிம்பமும் பாரதீய ஜனதாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

பிரசார உத்திகளை எப்படி வகுப்பது? களத்தில் எங்கெங்கு என்னென்ன பிரச்சினைகளை முன்நிறுத்துவது? யாரை பொறுப்பாளர்களாக நியமிப்பது? வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் சேகரிப்பது எப்படி? என்பதில் ராஜ்நாத்சிங் வல்லவர்.

எனவே மோடி-ராஜ்நாத்சிங் என்ற இரட்டை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியின் வேகத்துக்கு முன்னால் காங்கிரசால் ஈடுகொடுக்கமுடியாமல் போய்விட்டது.

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா தலைவராக அமித்ஷா வந்தார். தேர்தல் உத்திகளை வகுப்பதில் இவரும் கில்லாடி. அமித்ஷா தலைவரான பிறகு உத்தரபிரதேசம், அசாம், பஞ்சாப், இமாசலபிரதேசம், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவே வெற்றி பெற்று உள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, மொத்தம் உள்ள 403 இடங்களில் 325 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது.

பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி என்று மாறி மாறி கோலோச்சி வந்த நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் நீண்ட காலத்துக்கு பிறகு வலுவாக காலூன்றியது பாரதீய ஜனதா தலைவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

ஒரு சில ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் மோடி பிரதமரான பிறகும், அமித்ஷா தலைவரான பிறகும் பாரதீய ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் ஆட்சிதான் நடைபெறுகிறது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஷ்கார், ஜார்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட 20 மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி செய்கிறது. மராட்டியம், காஷ்மீர், பீகார் போன்ற சில மாநிலங்களில் பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்துகிறது.

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் வியாபித்து இருந்த காங்கிரஸ் கர்நாடகம், பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது. இதில் கர்நாடகம் மட்டுமே பெரிய மாநிலம் ஆகும்.

வட மாநிலங்களில் வலுவாக இருக்கும் பாரதீய ஜனதா, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு வடகிழக்கு மாநிலங்களிலும் தடம் பதித்து தனது செல்வாக்கை நிலைநாட்டி இருக்கிறது. அசாம் மாநிலத்தில் காங்கிரசிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றிய பிறகு, வட கிழக்கு மாநிலங்களில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதன் பலனாக அந்த மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

ஆனால் தென் மாநிலங்களில்தான் பாரதீய ஜனதாவின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

2008-ல் தென் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்து வலுவாக காலூன்றிய பாரதீய ஜனதாவால் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரகாசிக்க முடியவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா பருப்பு வேகவில்லை. இங்கு அக்கட்சியின் செல்வாக்கு ‘நோட்டா’வுடன் ஒப்பிடும் நிலையில்தான் உள்ளது.

குஜராத், ராஜஸ்தான் என்று ஒவ்வொரு மாநிலமாக வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் பாரதீய ஜனதா, தென் மாநிலங்களையும் ஒரு கை பார்த்துவிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறது.

“காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என்று சபதம் மேற்கொண்டு முழங்கி வரும் பிரதமர் மோடி, அந்த முயற்சியில் முக்கால் கிணறு தாண்டிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். தெற்கே தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய 4 மாநிலங்கள்தான் அவருக்கு பெரும் சவாலாக விளங்குகின்றன.



தமிழகத்தில் வலுவான கட்டமைப்புடன் விளங்கும் திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்து தாக்குப்பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை பாரதீய ஜனதா தலைமை நன்கு உணர்ந்தே இருக்கிறது. இதேபோல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், காங்கிரசையும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதியையும், கேரளாவில் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகளையும் வீழ்த்துவதும் சாதாரணம் அல்ல.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் பேரியக்கமே, 1967-க்கு பிறகு திராவிட கட்சிகளை அண்டிப்பிழைப்பு நடத்தவேண்டிய பரிதாப நிலையில்தான் இருக்கிறது என்கிறபோது, பாரதீய ஜனதாவின் நிலையைப்பற்றி சொல்லவேண்டியதில்லை.

தென் மாநிலங்களில் வலுவாக தடம் பதிக்கும் முயற்சி ஒருபக்கம் இருந்தாலும், வெற்றிப்படிக்கட்டுகளில் மளமளவென ஏறி வந்த பாரதீய ஜனதாவுக்கு, சமீபத்தில் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் வேகத்தடையாக அமைந்தன.

குறிப்பாக உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், புல்பூர் ஆகிய இரு எம்.பி. தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி பாரதீய ஜனதா தலைவர்களை நிறையவே சிந்திக்க வைத்து இருக்கிறது.

பாரதீய ஜனதா வசம் இருந்த இந்த தொகுதிகளை சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி தட்டிப்பறித்து விட்டது. அதிலும் கோரக்பூர் அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நீண்ட காலம் உறுப்பினராக இருந்த தொகுதி ஆகும். முதல்-மந்திரி ஆனதால் அவர் கோரக்பூர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

கடந்த ஆண்டு குஜராத் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட போதிலும், அந்த கட்சிக்கு முந்தைய தேர்தலில் கிடைத்ததை விட குறைவான இடங்களே கிடைத்தன. இதனால் குஜராத் தேர்தல் வெற்றியை அக்கட்சியால் முழு மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் போய்விட்டது.

பாரதீய ஜனதாவுக்கு ஏற்பட்டு வரும் இந்த சறுக்கல்களுக்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி அமலாக்கம், ஆதார் அட்டை விவகாரம் ஆகியவை முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. நாட்டை செம்மைப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாக பாரதீய ஜனதா கூறினாலும், இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள் என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக ஆதார் அட்டை விவகாரத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள், உத்தரவுகள் என்று பார்த்து மக்கள் சலித்துவிட்டார்கள். ஆதார் எண்ணை எதனுடன் எல்லாம் இணைக்க வேண்டும் என்று தெளிவாக தெரியாமல் அப்பாவி மக்கள் மிகவும் அல்லாடிவிட்டார்கள்.

எதற்கெல்லாம் ஆதார் அட்டை வேண்டும்? எதற்கெல்லாம் வேண்டாம்? என்பதில் அரசிடம் தெளிவான நிலைப்பாடு இல்லாததே இதற்கு காரணம்.

பொதுவாக நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை; தொல்லை கொடுக்காமல் இருக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு ஏதாவது தொல்லையோ, இடையூறோ ஏற்பட்டால் அவர்களுடைய கோபம் அரசாங்கத்தின் மீதுதான் திரும்பும். ஆளும் பாரதீய ஜனதா மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, சலிப்புக்கு இந்த கோபம்தான் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

சமீப காலமாக அம்பலமாகி வரும் வங்கி மோசடிகளும் பாரதீய ஜனதாவின் மீதான மக்களின் நன்மதிப்பை சீர்குலைப்பதாக உள்ளது. “விவசாய கடன், கல்வி கடன் வாங்க வங்கிகளுக்கு நாம் நடையாய் நடக்கும் போது, தொழில் அதிபர்கள் மட்டும் எப்படி பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்” என்ற ஆதங்கமும், கோபமும் சாமானிய மக்களுக்கு இருக்கிறது. தங்கள் கோபத்தை அவர்கள் ஆட்சியாளர்களிடம்தான் காட்டுவார்கள்; வேறு வழிஇல்லை.

எந்த ஆட்சியில் நடந்தது என்பதை பற்றியெல்லாம் மக்கள் அலசி ஆராய்ந்து பார்ப்பது இல்லை. தற்போது யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்களிடம்தான் தங்கள் கோபத்தை காட்டுவார்கள். எனவே வங்கி மோசடிகளும் பாரதீய ஜனதாவுக்கு பாதகமாகவே அமைந்து உள்ளது.

மேற்கண்ட விவகாரங்களில் பாரதீய ஜனதா மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் அதிருப்தி எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக திரும்ப வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தேசிய அளவில் காங்கிரசுக்கு சாதகமாக காற்று வீசக்கூடும். ஆனால் இந்த அதிருப்தியின் பலனை அந்தந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகள் அறுவடை செய்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடிப்பதால் தமிழக மக்களும், மாநில பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்பை சரிக்கட்ட சிறப்பு அந்தஸ்து வழங்காததால் ஆந்திர மக்களும் மத்திய பாரதீய ஜனதா அரசின் மீது கோபத்தில் இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு விவகாரத்தால் பாரதீய ஜனதா மீது அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மத்திய பாரதீய ஜனதா அரசின் சில நடவடிக்கைகள் மீது மக்களுக்கு அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டு இருக்கும் நிலையில், “காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என்ற மோடியின் கோஷத்தையும், அவரது விருப்பத்தையும் மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பலத்த அடி வாங்கிய எதிர்க்கட்சிகள், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை ஒரு கை பார்த்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அணி திரட்டும் முயற்சியில் இப்போதே இறங்கிவிட்டன.

எனவே மோடியின் இந்த விருப்பத்துக்கான பதிலை அவர்கள், வருகிற 17-வது நாடாளுமன்ற தேர்தலில் தெரிவிக்காமலா போய்விடுவார்கள்?

•••

கை ஓங்குமா? தாமரை மலருமா?

காங்கிரஸ் செல்வாக்கு பெற்று விளங்கும் மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று.

நிஜலிங்கப்பா, தேவராஜ் அர்ஸ், குண்டுராவ் போன்ற தலைவர்களின் ஆட்சி காலத்தில் கர்நாடகம் காங்கிரசின் கோட்டையாக விளங்கியது. 1983-க்கு பிறகு அங்கு ஜனதா, ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாதளம் என்று மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்தன.

தென் மாநிலங்களில் பாரதீய ஜனதா முதன் முதலாக கால் பதித்தது கர்நாடகத்தில்தான். 2008-ம் ஆண்டு அங்கு முதல் முதலாக ஆட்சி அமைத்து பிள்ளையார் சுழி போட்ட பாரதீய ஜனதா 2013-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தது. (அரசியல் குழப்பத்தின் காரணமாக 2007-ம் ஆண்டில் எடியூரப்பா தலைமையில் அமைந்த பாரதீய ஜனதா அரசின் ஆயுள் ஒரு வாரத்தில் முடிந்தது.)

தற்போது அங்கு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகிற மே 12-ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

கர்நாடகத்தில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா மொத்தம் உள்ள 224 இடங்களில் 110 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் காங்கிரசுக்கு 80 இடங்களும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 28 இடங்களும் கிடைத்தன. பிற கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெற்றன.

அதன்பிறகு 5 ஆண்டுகள் கழித்து 2013-ல் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 40 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் 122 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 40 இடங்களும், பிற கட்சிகளுக்கு 22 இடங்களும் கிடைத்தன.

2008 முதல் 2013 வரை நடைபெற்ற பாரதீய ஜனதா ஆட்சியில் கர்நாடகம் எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என்று 3 முதல்-மந்திரிகளை பார்த்தது. ஊழல் புகாரின் காரணமாக எடியூரப்பா பதவி விலகியதால், அடுத்தடுத்து 2 முதல்-மந்திரிகள் வந்தார்கள்.

முதல்-மந்திரி பதவியை இழந்ததால் பாரதீய ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய எடியூரப்பா, தாக்குப்பிடிக்க முடியாததால் தாய் வீடான பாரதீய ஜனதாவுக்கே மீண்டும் திரும்பியது சுவாரசியமான தனிக்கதை.

கடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா பெரும் தோல்வியை சந்தித்த போதிலும், அதன்பிறகு 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 17 தொகுதிகளை (வாக்கு சதவீதம் 43.4) கைப்பற்றியது. 41.2 சதவீத வாக்குகளை பெற்ற ஆளும் காங்கிரசுக்கு 9 இடங்களே கிடைத்தன.

2008 முதல் 2011 வரை முதல்-மந்திரி நாற்காலியில் இருந்த 75 வயதான எடியூரப்பாவை முன்நிறுத்தி இந்த சட்டசபை தேர்தலை சந்திக்கிறது பாரதீய ஜனதா.

எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டில் கைதானவர் என்றபோதிலும், அடித்தட்டு மக்களுக்கும் நன்கு அறிமுகமான தலைவர் என்பதாலும், சிறந்த பேச்சாற்றல் கொண்டவர் என்பதாலும், கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டிகளையும் ஓரணியில் கொண்டு வர பெரிதும் உதவுவார் என்பதாலும் இவரை முதல்-மந்திரி பதவிக்கு அக்கட்சி முன்நிறுத்தி உள்ளது.

இந்த நிலையில் பாரதீய ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியாக, லிங்காயத் சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று அவர்களை தனி மதத்தினராக அங்கீகரிக்க சம்மதம் தெரிவித்துள்ள சித்தராமையா அரசு, அவர்களுக்கு தனி அங்கீகாரம் வழங்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறது.

காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கை, பாரதீய ஜனதாவுக்கு ஆதரவான லிங்காயத்துகளின் வாக்குகளை பிரிக்கும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. என்றாலும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்-மந்திரி வேட்பாளராக முன்நிறுத்தி இருப்பதால், பாரதீய ஜனதா மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

அன்ன பாக்யா, ஆரோக்கிய பாக்யா, இந்திரா கேண்டீன் போன்ற மக்கள்நல திட்டங்களை கொண்டு வந்தது, கர்நாடகத்துக்கு தனிக்கொடி அறிமுகம் செய்தது போன்றவை சித்தராமையா அரசுக்கு சாதகமான அம்சங்கள் என்றபோதிலும், சில மூத்த மந்திரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், கோஷ்டி அரசியல் ஆகியவை காலை வாரிவிடுமோ என்று காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.



மைசூர் பிராந்தியத்தில் செல்வாக்கு பெற்று விளங்கும் மதசார்பற்ற ஜனதாதளம், அந்த பகுதியில் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் கடும் போட்டியாக விளங்கும் என்று கருதப்படுகிறது. தேவேகவுடாவின் மகன் குமாரசாமி அறிமுகப்படுத்திய கிராம வஸ்தவ்யா போன்ற சில திட்டங்கள் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு சாதகமான அம்சம் என்றபோதிலும் வட கர்நாடகத்திலும், கடலோர கர்நாடக பகுதியிலும் இந்த கட்சிக்கு செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் இல்லாதது பெரும் குறையாக கருதப்படுகிறது.

நாட்டில் தங்கள் வசம் இருக்கும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகம்தான் என்பதால், இந்த தேர்தலில் வெற்றி பெற்று அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் காங்கிரஸ் இருக்கிறது.

பாரதீய ஜனதாவோ, கர்நாடகத்தை பிடித்துவிட்டால் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தை நெருங்கிவிடலாம் என்று கணக்கு போடுகிறது.

ஒருவேளை இழுபறி நிலை ஏற்பட்டால், யார் ஆட்சி அமைப்பார்கள்? என்பதில் தங்களுடைய பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பது மதசார்பற்ற ஜனதாதளத்தின் கணக்கு.

யார் என்ன கணக்கு போட்டாலும், கர்நாடகத்தில் கை ஓங்குமா? அல்லது தாமரை மலருமா? என்பது வாக்காளர்கள் போடும் கணக்கில்தான் இருக்கிறது.

Next Story