கொட்டக்குடி ஆற்றில் குவித்து வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் மணல் பறிமுதல்


கொட்டக்குடி ஆற்றில் குவித்து வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் மணல் பறிமுதல்
x
தினத்தந்தி 19 April 2018 10:54 PM GMT (Updated: 19 April 2018 11:04 PM GMT)

கொட்டக்குடி ஆற்றில் குவித்து வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டன.

போடி,

போடி அருகே அணைப்பிள்ளையார் கொட்டக்குடி ஆறு ஓடுகிறது. மழை காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். கடந்த ஆண்டு பெய்த மழையால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஆற்றில் மணல் பரந்து விரிந்து காணப்பட்டது.

இதையொட்டி மர்மநபர்கள் இரவு, பகலாக மாட்டுவண்டி, டிராக்டர், வேன் மூலம் மணல் அள்ளி சென்றனர். இதனால் ஆற்று பகுதியில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகின. ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். அதுமட்டுமின்றி ஆற்றில் ஆங்காங்கே மணலை மர்மநபர்கள் குவித்து வைத்திருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போடி தாசில்தார் ராணி, வருவாய் அலுவலர் ராஜாங்கம் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஆற்று பகுதியில் ஆங்காங்கே மணல் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அதிகாரிகள் வருவதை அறிந்த மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக அங்கு மணல் அள்ளுவதற்காக வந்த கேரள லாரி ஒன்று வந்தது. அதிகாரிகள் நிற்பதை பார்த்த டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அந்த லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story